வியாழன், ஜூலை 30, 2009

முத்தான முதல்வர்கள்


முதல்வர்கள் பலவிதம்



ஒரு நல்ல காரியத்துக்கான அடிக்கல்லை அறிவிப்பாக நாட்டியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி! பிற்காலத்தில் அவரது கோபால புரம் வீட்டை இலவச மருத்துவமனை நடத்த தானமாகக் கொடுத்திருக்கிறார். இது அவருக்கான தனிப் பெருமை!
இதை அறிவித்த கூட்டத்தில் கருணாநிதி இன்னொரு தகவலையும் தந்துள்ளார். ''இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதலமைச்சரின் வீடு இருப்பது என்று பார்த்தால், அது என் வீடாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். முதல்வராகப் பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம் அரசு பங்களா ஒன்றில் நான் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்'' என்றும் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பது அரசியலுக்கான இலக்கணம். அதற்கு உதாரண புருஷர்களாக இந்தியாவில் பல முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கு உள்ள பெருமை.
திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சர்க்கார் என்று ஒருவர் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அவரது மொத்தச் சொத்து எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய்! அவர் குடியிருப்பது பங்களாவோ அல்லது தெருவில் உள்ள பல வீடுகளில் ஒன்றாகவோ அல்ல.... பல வீடுகள் இருக்கும் அபார்ட்மென்ட்டில். இங்கெல்லாம் அமைச்சர்களுக்குத் தனித் தனி பங்களாக்கள் இருக்கின்றன. எம்.எல்.ஏ-க்களுக்கு சிறு பங்களாக்கள் அளவிலான அபார்ட்மென்ட்டுகள் இருக்கின்றன. இது போக, சென்னையில் இரண்டரை கிரவுண்ட் இடம் கேட்டு அவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், திரிபுராவில் அமைச்சராக வருபவர்கள் குடியிருக்க அரசு சார்பில் கட்டப்பட்ட அபார்ட்மென்ட்டுகள்தான். அதில்தான் இன்னமும் மாணிக் சர்க்கார் வசித்து வருகிறார். நான்காவது தடவையாக முதலமைச்சர் அவர். அவரது மனைவி பஞ்சலி, சமூக நலத் துறையில் வேலை பார்க்கிறார். அந்த வேலையின் மூலம் வரும் வருமானம்தான் குடும்பம் நடத்தப் பயன்படுகிறது. சொந்த நிலம், வீடு, கார் எதுவும் மாணிக் சர்க்காருக்குக் கிடையாது. அரசாங்க காரை அவர் தவிர யாரும் பயன்படுத்தக் கூடாது. ஒரே இடத்துக்கு மனைவியும் செல்வதாக இருந்தாலும், தனது மனைவியை அரசாங்க காரில் ஏற்ற அனுமதிக்க மாட்டாராம்.
கேரளாவின் முதலமைச்சர் அச்சுதானந்தன், 9 லட்சம் ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் டெய்லராக இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐக்கியமாகி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. ஆனால், அவருக்கு திருவனந்தபுரத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரி சொத்து எதுவும் இல்லை. ஆலப்புழா மாவட்டம் புன்னம்புராவில் இருக்கும் வீட்டைப் பார்த்தால் 'முதல்அமைச்சரின் வீடா' என்று கேட்கத் தோன்றும். இப்போது அவர் இருப்பதென்னவோ திருவனந்தபுரத்தில் அரசு வீட்டில்தான்! ஆனால்..? ஒரு நகராட்சித் தலைவருக்கு நகராட்சி வீடு கிடைத்ததும் எவ்வளவு செலவழித்து மராமத்து பார்ப்பார் என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமைச்சர்களது பங்களாக்கள் பல லட்சங்களை உள்வாங்கும். ஆனால், அச்சுதானந்தனுக்கு நடந்ததைப் பாருங்கள். ஒரு நாள் கட்டிலில் படுத்திருந்தவர், அவசரமாக எழுந்து பாத்ரூம் போனார். உள்ளே இருந்தவருக்கு 'டமார் டிமீர்' என்று ஏதோ சத்தம். வெளியே வந்து பார்த்தார். கட்டிலுக்கு மேலே இருந்த சீலிங் உடைந்து நொறுங்கிக் கீழே விழுந்திருந்தது. கொஞ்சம் தாமதித்திருந்தால், அன்று அச்சுதானந்தன் படுகாயப்பட்டிருப்பார்
பினராய் விஜயன் தனது கட்சிக்காரர் என்பதை யும் மீறி, ஊழல் செய்தார் என்பதற்காக நடவ டிக்கை எடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டியவர் அச்சுதானந்தன். இது கேரளாவின் கௌரவத்தைத் தூக்கியது என்பதால்தான் பொலிட் பீரோவில் இருந்து மட்டும் அச்சுதானந்தனைத் தூக்கி ஆறுதல் அடைந்த அவருடைய கட்சி, முதல்வர் பதவியில் கைவைக்கவில்லை.
மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் எளிமைக்கு உதாரணமானவர். மாவோயிஸ்ட்டுகளுடன் மல்லுக்கட்டி நிற்கும் அவர் மீது அரசியல்ரீதியாக விமர்சனங்கள் இருக்கலாம். ஊருக்குள் எந்த காரையும் விட மாட்டோம் என்று மாநிலத்தின் சில பகுதியில் போராட்டக்காரர்கள் கொந்தளித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு ரிக்ஷா மட்டும் அமைதியாக உள்ளே நுழைந்தது. அதில் இருந்து இறங்கியவர் புத்ததேவ்.
ஜோதிபாசுவுக்குப் பிறகு இவர்தான் முதல்வர். திரிபுரா மாதிரி இங்கும் அபார்ட்மென்ட்தான். அமைச்சராக புத்ததேவ் ஆனபோது ஒரு வீடு கிடைத்தது. அங்குதான் இன்றும் இருக்கிறார். அப்போது வைத்திருந்த பழைய கார்தான் இப்போதும். மனைவி, மகள் தவிர வீட்டில் யாரும் கிடையாது. முதல்வர் சம்பளத்தை அப்படியே கட்சிக்குக் கொடுத்துவிடுகிறார். கட்சி தரும் சம்பளத்தை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை சேர்த்த சொத்தாக 15 லட்சம் ரூபாய்தான் தேறுமாம். மாவோயிஸ்ட் அச்சுறுத்தலைத் தொடர்ந்து முழுப் பாதுகாப்புடன் கூடிய வீட்டில் அவர் குடியேற வேண்டும் என்று மத்திய உளவுத் துறையும் மாநில போலீசும் சொன்னதை, இவர் இன்னும் ஏற்கவில்லை.
இன்று ஒரிஸ்ஸா முதல்வராக இருக்கும் நவீன்பட்நாயக்கின் அப்பா பிஜூ பட்நாயக் முதல்வராக இருந்தவர். சொந்தமாக கார் வைத்திருப்பது மாதிரி, அந்தக் காலத்தில் கலிங்கா ஏர்லைன்ஸ் என அரசியலுக்கு வருவதற்கு முன்பே சொந்தமாக விமானம் வைத்திருந்தவர். மகன் நவீனை அமெரிக்காவில் படிக்கவைத்தார். அப்பாவுக்குப் பிறகு அரசியலுக்குள் நுழைந்த ஃபாரின் ரிட்டர்ன் மகனுக்கு இன்றைய சொத்து மதிப்பு இரண்டு கோடிகள்தான் தேறும். மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் நவீன் எந்தப் பாதுகாப்பு பந்தாக்களும் இல்லாமல் காரில் போய்க்கொண்டு இருந்தார். பின்னால் வேகமாக வந்த கார் ஓங்கித் தட்டியதில் முதல்வர் கார் நொறுங்கியது. உள்ளே இருந்த நவீனுக்கும் படுகாயம். முழுமையாக அவர் மீண்டுவர பலநாள் ஆனது.

இவரைப் போலவே எளிமையானவர், பீகாரின் நிதீஷ்குமார். முதல்வரானதும் அவர் இருப்பது அரசாங்க வீடு. ஏற்கெனவே முதல்வராக இருந்த லாலு, ரப்ரி பயன்படுத்திய வீடு அது. ஆனால், அவருக்குச் சொந்தமாக பாட்னாவில் இருப்பது சிறு அபார்ட்மென்ட் வீடு. போக்குவரத்துக்குச் சரியாக இருக்காது என்பதால் இங்கு மாறி இருக்கிறார். சொத்து மதிப்பு 55 லட்ச ரூபாய். நிதீஷ் இப்போதெல்லாம் அதிகம் இருப்பது கிராமத்தில்தான். ரிக்ஷாவில் தினமும் ஏதாவது ஒரு கிராமத்துக்குப் போய் அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்பது, அங்கேயே தங்கிவிடுவது, மறுநாள் அடுத்த கிராமம்... இதற்கு வளர்ச்சிப் பயணம் என்று பெயர் வைத்திருக்கிறார். அவசர ஆலோசனைகள் என்று வந்து பாட்னா திரும்ப முடியாத தூரமாக இருந்தால், அமைச்சர்களைத் தான் தங்கியிருக்கும் கிராமத்துக்கே வரச் சொல்லி கேபினட்டை நடத்துகிறார். 'இந்த மாதிரி ஊருக்கெல்லாம் வந்திருக்க மாட்டீங்கள்ல' என்று மந்திரிகளிடம் கிண்டலுக் கும் குறைவில்லை.
இதே மாதிரி நகரங்களுக்குள் கலக்குபவர் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான். ஒன்றரைக் கோடிக்கும் குறைவான சொத்துள்ளவர். மொபைல் போன்கூட வைத்துக்கொள்வது இல்லை. திடீரென்று ஒருநாள், தனியார் டிராவல்சுக்கு போன் செய்து ஒரு காரை வாடகைக்குப் பிடித்தார். என்னுடன் போலீஸ் யாரும் வரக் கூடாது என்று கட்டளை போட்டார். அவர் மட்டும் காரில் ஏறி போபாலை வலம் வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜய்தோரே என்பவர் அந்த நள்ளிரவு நேரத்தில் வரும் வாகனங்களை நிறுத்தி வசூல் மும்முரத்தில் இருந்தார். அவரைக் கையும் களவுமாகப் பிடித்து சஸ்பெண்ட் செய்தார். கண்ணைக் கூசும் வெளிச் சத்துடன் எதிரே ஒரு கார் வந்தது. இப்படி லைட் போட்டுச் சென்றால் விபத்துதானே நடக்கும் என்று அந்த காரை விரட்டினார். அது அரசு வாகனம். உள்ளே இருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, பணக்காரர்தான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால், வீடு என்று பார்த்தால் சொல்லுவதற்கு அவரைப் பற்றியும் மிக சுவாரஸ்யம் உண்டு. அவருக்கு கடப்பா மாவட்டம் மானபுலி வெந்தலாவில் பரம்பரை வீடு இருக்கிறது. அங்கு அவரது அம்மா இருக்கிறார். நெடுஞ்சாலைத் துறை நான்கு வழிச் சாலை அமைக்க இடைஞ்சலாக இருப்பதால் அந்த வீட்டைஇடிக்க அதிகாரிகள் முயற்சிக்க... உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். ராஜசேகர ரெட்டி உடனே அதிகாரிகளை அழைத்தார். 'மக்களுக்கு நன்மை செய்வதற்காக என்னுடைய வீட்டை இடித்தாலும் பரவாயில்லை' என்றவர், நானே எனது சொந்தச் செலவில் இடித்துத் தருகிறேன் என்று இடித்தும் கொடுத்தார்.
தேர்தல் பிரசாரத்தில் இருந்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. மைசூர் மாவட்டம் நஞ்சன் கூடுவில் அவரது கார் போய்க்கொண்டு இருந்த போது, தேர்தல் அதிகாரிகள் மறித்தார்கள். 'நான்கு கார்களுக்கு மேலே உங்களது அணிவகுப்பில் வருகிறது'' என்று கூடுதல் காரைப் பறிமுதல் செய்யப் போனார்கள். அனுமதி வாங்காத எண்ணுள்ள காரைப் பறிமுதல் செய்ய அவர்கள் முயற்சித்தபோது, உள்ளே இருந்தார் எடியூரப்பா. 'தப்பு என் மேலதாங்க' என்று எந்தக் கோபமும் இல்லாமல் இறங்கினார். இறக்கிவிட்ட அதிகாரிகள் இன்னமும் நிம்மதியாக அங்கு அதே வேலையில்தான் இருக்கிறார்கள்.
இந்திய மாநிலங்களை ஆளும் முதல்வர்கள் காட்டியுள்ள சொத்துக் கணக்குப்படி பார்த்தாலும்... ஒரு கோடி முதல் பத்துக் கோடி வரை கணக்கு காட்டியிருப்பவர்கள் 18 பேர். மற்றபடி, உ.பி. முதல்வர் மாயாவதியின் 52 கோடியுடனும், தமிழக முதல்வரின் 26 கோடியுடனும் மேலே சொன்னதில் பல முதல்வர்களின் சொத்துக் கணக்கு போட்டியிட முடியாதுதான்!

நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை: