கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 21, 2008

கேரக்டர் 'அப்பச்சி' அருணாசலம்


கேரக்டர் 'அப்பச்சி' அருணாசலம்


''யாருங்கறேன் அது? கானாடுகாத்தான் கருப்பய்யாச் செட்டியாரா? வாங்க, இருங்க. மெட்ராசுக்கு எப்ப வந்தீக? உங்க அப்பச்சி எப்படி இருக் காக? பானா, மூனா, லேனா, சோனா லெச்சுமணஞ் செட்டி யார் மகனுக்குப் போன மாசம் கோட்டையூர்லே கல்யாணம் நடந்துதாமில்லே? ஏங்கறேன்... என்ன செலவாகியிருக்கும்? வாணத்தைக் கொளுத்தி வானத்திலே விட்டாகளாமே!
ஊம்... பையனைச் சீமைக்கு அனுப்பி படிக்க வெச்சாகளாம். அவன் திரும்பி வந்து சிகரெட்டு புடிக்கிறானாம். ஏங்கறேன்... இதைக் கத்துக்க சீமைக்கா போகணும்?
காத்துலே பறக்குமே, அதென் னங்கறேன், ஏரோப்ளான்! அந்த வண்டியிலேதானாமில்லே போய் வந்தானாம்? ஏம் போக மாட்டாக? அவுக பரம்பரையா மலேயாவிலே வட்டி வியாபாரம் செஞ்சு, லெச்சம் லெச்சமாகக் குவிச்சு வெச்சிருக்காக. நமக்கு முடியுமாங்கறேன்? என்ன ஆனா மூனா கானா, ஏம் பேசாம இருக் கீக? நீங்க சொல்லுங்க, நமக்கு எதுக்கு இந்தப் பட்டண வாசமெல்லாம்? அதைச் சொன்னா நம்ம மகன் கேக்கறானில்லே...''
அப்பச்சி அருணாசலம் செட் டியார் தமது கைக் கோலால் தரையைத் தட்டிக் கொண்டே, அந்த பங்களாவின் வராந்தாவிலுள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தபடி, வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தம் மகனைப் பற்றி இப்படி ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பார்.
''ஏன்? உங்க மகனுக்கென்ன? நல்லாத்தானே பிசினஸூ பண் ணிக்கிட்டிருக்காக?'' என்பார் ஆனா மூனா கானா.
''என்னங்கறேன் நீங்க ஒண்ணு! உங்களுக்குத் தெரியாதா? தேவ கோட்டையிலே கப்பலாச்சும் வீடு. இருக்கிற சொத்தை வெச்சு இன்னும் நாலு தலைமுறைக்கு கால் மேலே கால் போட்டுச் சாப்பிடலாம். இந்த மெட்ராசுலே நமக்கு என்னய்யா வேலை? கேட்டா பிசுனஸூ பண்ணிக்கிட் டிருக்கேங்கறான். வீட்டிலே தங்க றானா? இவனுக்கெதுக்குங்கறேன் இந்த வேலையெல்லாம்?
ஒரு லெச்சம் செலவளிச்சு இந்த பங்களாவைக் கட்டியிருக் கான். நமக்கெதுக்கு இந்தப் பட்ட ணத்திலே பங்களாவும் காரும்? ஊரிலே கோட்டை மாதிரி வீட்டைப் பூட்டி வெச்சிருக்கோம். கட்டி அணைக்க முடியாதுங் கறேன் ஒவ்வொரு கம்பமும். என்னங்கறேன்... உங்களுக்குத் தெரியாததா?
அதையெல்லாம் விட்டுப் போட்டு மெட்ராசுலே பிசுனஸூ பண்றானாம்! சரி, பண்ணட்டும். இந்த நாயை எதுக்குங்கறேன் நானூறு ரூபாய் கொடுத்து வாங் கணும்? அது இருந்தாத்தான் பங்களாவுக்கு அளகாம்! அது சும்மாவா இருக்குது? ரொட்டியைக் கொண்டாங்குது! மட்டனைக் கொண்டாங்குது! சும்மா இருக்குற நேரத்துலே என்னைப் பார்த்து உர் உர்ருங்குது. சரி, போவட்டும்; இவ்வளவு பெரிய தோட்டம் எதுக்குங்கறேன்? தோட்டம்னா சும்மாவா? தோட்டக்காரனுவ நாலு பேரு. இவனுக என்ன பண்றானுவ? ஒரு கத்திரிச் செடி உண்டா? ஒரு வெண்டைச் செடி உண்டா? எல்லாம் இங்கிலீசு பூ இல்லே பூக்குது. ஏங்கறேன்? அந்தப் பூ எதுக்கு ஒதவும்? சொல்லுங்கறேன்.
என்ன, ஆனா மூனா கானா? என்ன பேசாம இருக்கீக? குளந்தை களுக்கு ஒரு திருவாசகம், ஒரு தேவாரம் தெரியுமா? எல்லாம் இங்கிலீசு படிப்பில்லே படிக்கிறாக. அதாங்கறேன், கான்வென்ட்டா மில்லே கான்வென்ட்டு... நூறு நூறாப் பணத்தைப் பறிக்கிறாகளே. அந்த ஸ்கோல்லே படிக்கிறாக ளய்யா! நீங்களும் நானும் அந்தக் காலத்திலே கான்வென்ட்டா படிச் சோம்? அதனாலே இப்ப என்னங் கறேன், கெட்டாப் போயிட்டோம்? இதைச் சொல்லப்போனா 'இந்தக் கௌத்துக்கு என்ன வேலை? போட்டதைச் சாப்பிட்டுட்டுப் பேசாமே ஊஞ்சல்லே விளுந்து கிடக் கிறதுதானே'ம்பாக இல்லையா?''


நன்றி : விகடன் பொக்கிஷம்


வெள்ளி, டிசம்பர் 12, 2008

கேரக்டர் : கமிஷன் குப்பண்ணா


கேரக்டர் : கமிஷன் குப்பண்ணா


குப்பண்ணாவைத் தேடிக் கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக்கொண்டிருப் பான்.
''என்ன ஸார் பண்றது? சப் ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம்; வக்கீல் வீட்டுப் பையனுக்கு காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணாதான்! முடியாதுன்னா யார் விடறா?'' என்பான்.
''குப்பண்ணா! உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்று ஓடி வருவார் ஓர் ஆசாமி.
''ரிஸ்ட் வாச் விஷயம்தானே? வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்'' என்று அவரை அழைத்துச் சென்று, ''கடியாரத் தைக் காட்டுங்க, பார்க்கலாம். எத்தனை ஜ்வல்ஸ்? பழசு மாதிரி இருக்கே?'' என்பான்.
''என்ன, குப்பண்ணா! புது வாச் இது! பார்த்தா தெரியல்லே? சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசம்தான் வாங்கினேன். 320 ரூபாய்'' என்பார் அவர்.
''அடாடா! ஏமாந்துட்டேளே சார்! என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்று முப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப் பேனே! சரி, போறது. இப்ப யார் சார் வாங்கப்போறா? இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல் லுங்க. ஒரு இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்'' என்று கடியாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடி வருவார்.
''என்ன குப்பண்ணா? உன்னை எங்கெல்லாம் தேடறது? சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?'' என்பார். அவ்வளவுதான்... ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் போய்விடுவான்.
''உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே! நாளோ ஓடிண்டிருக்கு. 'கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்; கச்சே ரிக்கு ஏற்பாடு பண்றேன்; பந்தல் காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு. நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னியே?''
''இப்பவும் சொல்றேன், நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. இதோ, இப்பவே போய் சத்தி ரத்தை 'ஃபிக்ஸ்' பண்ணிட்டு, கையோட கச்சேரிக்கும் ஏற்பாடு பண்ணிடறேன். பால்காரன், சமை யல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா? இன்னொரு விஷயம்... மாப்பிள்ளைக்கு ரிஸ்ட் வாச் போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே... ஒரு இடத்திலே ஃபஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. விலை ரொம்ப மலிவு. அவன் 300 ரூபா சொல்றான். வேணுமானா சொல்லுங்க, 250-க்கு முடிச்சுடலாம். முந்திக் காட்டாப் போயிடும்'' என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை அவர் தலையில் கட்டிவிடுவான். வாச்சின் சொந்தக்காரரிடம் 200-க்குதான் விலை போயிற்று என்று சொல்லி, 50 ரூபாய் கமிஷன் பார்த்துவிடுவான்.
''என்ன குப்பண்ணா, எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காய் மிஞ்சிப் போயிடுத்தே! அதை வித்துக் கொடுன்னு சொல்லியிருந்தேனே... மறந்துட்டியா!''
''வக்கீல் வீட்டுக் கல்யாணத் துக்கு வேண்டியிருக்கு. பெரிய காயா இருக்கணும்னு சொன்னா. அதான் யோசிக்கிறேன். எதுக்கும் விலையைச் சொல்லுங்க.''
''நூறு 15 ரூபாய்னு போட்டுண்டு தள்ளிவிடுடா. உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்.''
''கமிஷனா? சேச்சே! உங்ககிட்டே அதெல்லாம் வாங்குவேனா? அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு கமிஷனும் கிமிஷனும்?''
ஆனால், வக்கீல் வீட்டில் நூறு 20 என்று விலை சொல்லி, ஆயிரம் காயையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் 14 ரூபாய் என்று சொல்லி அதிலும் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான் கமிஷன் குப்பண்ணா
நன்றி : விகடன் பொக்கிஷம் (15.05.1960)

வெள்ளி, டிசம்பர் 05, 2008


கேரக்டர் 'அவுட்' அண்ணாஜி


நேர் வகிடு, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் - இவை யாவும் 'அவுட்' அண்ணா ஜிக்கே உரிய அம்சங்கள்.
முன்பின் தெரியாதவர்களிடத் திலே கூட ரொம்ப நாள் பழகிய வனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான். புருடாக்களும் கப்சாக் களுமாய் உதிர்த்துத் தள்ளிவிடு வான். தன்னுடைய பொய்களைக் கேட்பவர்கள் நம்புவார்களா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை.
''நேற்றுதான் டில்லியிலிருந்து திரும்பி வந்தேன். போன இடத்தில் ஒரு வாரம் 'டிலே' ஆகிவிட்டது. இப்போதுதான் ப்ளேனில் மீனம்பாக்கம் வந்து இறங்கினேன். டாம் அண்டு டிக் கம்பெனி புரொப்ரைட்டரும் என்னோடு தான் விமானத்தில் வந்தார். அவர் காரிலேயே என்னையும் அழைத்து வந்துவிட்டார்'' என்று தன்னுடைய பிரதாபங்களை அவிழ்த்துவிடுவான்.
''டில்லியில் ஏன் டிலே?'' என்று நாம் அவனை கேட்க வேண்டிய தில்லை. அவனாகவே சொல் வான்.... ''டிஃபன்ஸ் மினிஸ்டர் வி.கே.மேனன் என் கிளாஸ்மேட் டாச்சே! தற்செயலா என்னைப் பார்த்துட்டார். 'ஹல்லோ அண்ணாஜி! எங்கே கவனிக்காமல் போறே? வா வீட்டுக்கு!' என்றார். அவரோ ஓல்ட் ஃப்ரண்ட்; டிஃபன்ஸ் மினிஸ்டர் வேற! எப்படித் தட்டறது? சரின்னு அவரோடு போக வேண்டியதாப் போச்சு! டீ கொடுத்தார். எனக்கு டீ பிடிக்காது. ஆனாலும், என்ன செய்யறது! குடிச்சு வெச்சேன்.
''வந்தது வந்தே... என்னோடு கெய்ரோவுக்கு வறயா, நாசரைப் பார்த்துட்டு வரலாம்னார். எனக் கும் நாசர் கிட்டே கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு புறப் பட்டுட்டேன்.''
''நாசர் கிட்டே உனக்கென்ன வேலை?''
''ஒரு பிஸினஸ் விஷயமாதான்! நாசரிடம் அஸ்வான், 'டாம் கான்ட்ராக்ட்' கேட்டிருந்தேன். 'சூயஸ் தகராறு தீரட்டும்; அப்புறம் சொல்றேன்'னு சொல்லியிருந்தாரு. கெய்ரோவுக்குப் போய்விட்டு இண்டியாவுக்குத் திரும்பினேன். பாம்பேயில் இறங்கி டெஸ்ட் மாட்சைப் பார்த்துட்டு கார் ஏறப் போறேன்... கிரிக்கெட் பிளேயர் கண்டிராக்டர் இல்லே கண்டிராக்டர், அவன் என்னைப் பார்த்துட்டான். 'செஞ்சுரி போட்டேனே, பார்த்தயா அண்ணாஜி?'ன் னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். 'பிளேன்லே ஏதோ அகாமடேஷன் தகராறு. கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா?'ன்னான். சரின்னு ஏர் இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என்குயரி கர்ள் மிஸ்.கல்பனா தன்னோட ஸ்வீட் வாய்ஸ்லே 'என்ன வேணும்?'னா. 'அண்ணாஜி'ன்னேன். அவ்வளவுதான்... 'ஹல்லோ! அண்ணாஜியா? உங்க லெதர் பாக் இங்கே இருக்குது. மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்க. வந்து வாங்கிட்டுப் போங்கோ'ன்னா.
உடனே காரில் புறப்பட்டுப் போய் அந்த சிந்தி கர்ள் கிட்டே பையை வாங்கிண்டேன். என் பிசினஸே அதுலதானே இருக்குது?
''அண்ணாஜி! நீங்க ஒரு 'மொபைல் மல்டிபிளைட் பிஸினஸ் இன்ஸ்டிடி யூஷன்'னு அவ எனக்கு ஒரு அட்சதையைப் போட்டாள். கிறிஸ்மஸ் பிரசன்ட்டுக்குதான் அடிபோடறாங்கறது எனக்குப் புரியாதா? சாக்லெட் டின்னை வாங்கிப் போட்டுட்டு, கண்டிராக்ட ருக்கும் ஒரு ஸீட் புக் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.''
அண்ணாஜி இப்படி அளந்து கொண்டேயிருப்பான். பம்பாய், கல்கத்தா, டில்லி, லண்டன், சௌத் ஆப்பிரிக்கா என எல்லா இடங்களிலும் தனக்கு பிஸினஸ் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் எல்லாரையும் தெரியும் என்றும் சொல்வான்.
எல்லாம் ஒரே ஹம்பக்!
நன்றி : விகடன் பொக்கிஷம் (24.1.1960)

வியாழன், டிசம்பர் 04, 2008


கேரக்டர்: அக்கப்போர் சொக்கப்பன்


''சார், சார்!'' என்று கையைத் தட்டி, குடியே முழுகி விட்டதைப் போல் அவசரமாக யாரையோ கூப்பிடுகிறானே, அவன்தான் அக்கப்போர் சொக்கப்பன்.
காலம், இடம், மனிதர்களின் தராதரம் எதுவும் அவனுக்கு அக்கறை கிடையாது. யாராய் இருந்தாலும், எந்த இடமாய் இருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு பயங்கரமாக நாலு சங்கதிகளையாவது சொல்லாவிட்டால் அவனுக்கு மண்டையே வெடித்துவிடும்.
''சார், உங்களுக்கு விஷயமே தெரியாதா? ராயப்பேட்டைல அரசியல் கட்சிங்க ரெண்டு, ஊர்வலமா போனதுல ரெண்டுக் கும் மோதல் ஏற்பட்டு, பெரிய ரகளை! ஒரே கல் வீச்சு! இதுவரைக் கும் முன்னூறு பேருக்கு மேலே பலத்த அடி. நாலு பேர் மண்டை உடைஞ்சு செத்துட்டாங்க. அடி பட்டவங்களுக்கு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே இடம் போதாம, ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வேற தூக்கிட்டுப் போறாங்க சார்!'' என்பான்.
ராயப்பேட்டைப் பக்கம் போய்ப் பார்த்தால், அங்கே இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது தகராறு நடந்திருக்கும். போலீசார் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். அவ்வளவு தான்!
திடீரென்று ஓடிவந்து, ''புழலேரி உடைத்துக்கொண்டுவிட்டது. மவுன்ட்ரோடு பக்கம் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரளியைக் கிளப்பி விடுவான். அந்தச் செய்தி கேட்டு மவுன்ட் ரோடே அல்லோலகல்லோலப் படும். அடுத்தாற்போல் மயிலாப் பூருக்குப் போய், ''வெள்ளத்தில் மவுன்ட்ரோடு பூராவும் முழுகி விட்டது. எல்.ஐ.சி. கட்டடத்தைத் தவிர எல்லாம் போய்விட்டது'' என்பான்.
அங்கிருந்து இன்னொரு இடத் துக்குப் போவான். அங்கே யாராவது குப்பைமேட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டு இருப்பார்கள். அதைப் பார்த்து விட்டு தெரிந்தவர்களிடமெல்லாம் ஓடிப்போய், ''சார்! பழைய மாம் பலத்தில் ஒரு தெருவே தீப்பிடிச்சு எரியுது சார். ஒரு டஜன் ஃபயர் என்ஜின் வந்து தீயை அணைச்சுக் கிட்டிருக்கு. ஆனா, இன்னும் தீ அடங்கினபாடில்லே'' என்பான்.
யாராவது ரோடிலே ஒரு நாலணாவைத் தொலைத்து விட்டிருப்பார். அந்தச் செய்தி சொக்கப்பனின் காதுக்கு எட்டும். அவ்வளவுதான்; சொக்கப்பன் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக் கெல்லாம் போய், ''ஸார்! துரை சாமி இன்னிக்கு நடுரோடிலே நாலாயிரம் ரூபாயைத் தொலைச் சுட்டான் ஸார்!'' என்பான். அதே செய்தியை அடுத்தவரிடம் போய் சொல்லும்போது, 'நாற்பதாயிரம்' என்பான். அதற்கடுத்தவரிடம் போகும்போது, அது நாலு லட்சம் ஆகிவிடும்!
காலைப் பத்திரிகைகளில் வரும் அக்கப்போர்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்து விட்டு, அவற்றுக்குக் காது மூக்கு வைத்து பயங்கரமாகச் சிருஷ்டித்து நாலு பேரிடத்தில் சொல்லாவிட்டால், அவனுக்கு நிம்மதி ஏற்படாது.
''பங்களூர்லே பாங்க் ஒண்ணு குளோஸ் ஆகப் போறதுன்னு ஒரு ஸீக்ரெட் இன்ஃபர்மேஷன் கிடைச்சுது. உடனே போய் அந்த பாங்கிலிருந்த என் பணம் பூரா வையும் வித்ட்ரா பண்ணிண்டு ராத்திரியோடு ராத்திரியா காரிலேயே திரும்பி வந்துட்டேன்'' என்று கரடி விடுவான்.
உலகமே பிரளயத்தில் மூழ்கி விடப்போவதாக போன வருஷம் ஒரு பெரிய வதந்தி அடிபட்டுக் கொண்டிருந்ததல்லவா? அந்த வதந்தியை அத்தனை பயங்கரமாகப் பரப்பியவனே அக்கப்போர் சொக்கப்பனாய்த்தான் இருக்க வேண்டும்!
நன்றி : விகடன் பொக்கிஷம் (12.3.1961)

கேரக்டர் அரசியல் அண்ணாசாமி


காலை பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு, மாலையில் கூடும் அந்த பார்க் மகாநாட்டில் விஷயங்களை அலசிவிட்டுப் போனால் தான், அங்கு கூடும் 'பென்ஷன்'களுக்கெல்லாம் தூக்கமே வரும்.
''அண்ணாசாமி ஸார்! வாங்கோ! நீங்க இல்லாம கான்ஃபரன்ஸே 'டல்' அடிக்கிறது. ஏன் லேட்டு?''
அவர் வந்ததுமே கான்ஃபரன்ஸ் களை கட்டிவிடும்.
அண்ணாசாமி வரும்போதே கடுகடுப்பாகத்தான் வருவார். உலகப் பிரச்னைகளையெல்லாம் எப்படித் தீர்த்து வைப்பது என்ற கவலை அவர் முகத்தில் பிரதி பலிக்கும்.
''திருச்சியிலே பார்த்தீங்களா? குழாய் தண்ணிக்குக் கியூவிலே நிக்கறங்களாம். பக்கத்திலே காவிரி ஓடறது. என்ன பிரயோஜனம்?'' என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான், அண்ணா சாமிக்கு ஆவேசம் பிறந்துவிடும்.
''இதென்ன அக்கிரமம் ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப் போமா? குடிக்கிற தண்ணிக்கு 'க்யூ'வாம்! இந்த அழகிலே காவிரி வாட்டரை மெட்ராஸூக்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்...'' என்பார்.
''கிருஷ்ணா நதியைக் கொண்டு வரப்போறதா ஒரு ஸ்கீம் இருந் துதே, அது என்ன ஆச்சு?''
''ஸ்கீமுக்கு என்னங்காணும் ஆயிரம் ஸ்கீம்! சி.பி-யும் சீனிவாசய் யங்காரும் போடாத ஸ்கீமா? பணத் துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம். கன்னாபின்னானு கடனை வாங்கி தண்ணி இல்லாத இடத்திலெல் லாம் டாம் கட்டிண்டிருக்கான். கேட்டா இன்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்புங்கறான். குருஷேவ் எதுக்குத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன். இன்டர்நேஷனல் ரிலேஷன் ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும், பார்த்துண்டே இரும்! நான் இன்னிக்குச் சொல்றேன்... குருஷேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா!''
''அதிருக்கட்டும்... எவரெஸ்ட் யாருக்குன்னு தீர்மானமாச்சா?''
''பரமசிவனுக்குத்தான், போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னுதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னுதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம விருந்து வெச்சிண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிஃபென்ஸ் வேறே... டிஃபென்ஸ் மினிஸ்டர் வேறே!''
''ரிடயரிங் வயசை அம்பத்தஞ்சி லேருந்து அம்பத்தெட்டா பண்ண முடியல்லே! பென்ஷன் வரியை எடுக்க மாட்டேங்கிறான். என்ன கவர்ன்மென்ட் வேண்டியிருக்கு? கம்யூனிஸ்டு கவர்ன்மென்ட்டே வந்தா தேவலைன்னு தோண்றது!''
''அதான் வந்துண்டிருக்கானே சைனாக்காரன்... மெதுவா பார்டர் கிட்டே வந்துட்டான். சூ-என்-லாய் வாரான் பார்த்தயளா? வர சமயத் தைக் கவனிச்சயளா? அதுலேதான் இருக்கு ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம், பஞ்சசீலம்னு இருக்கிறதையெல் லாம் கோட்டைவிடப்போறோம்! என்னய்யா சோஷலிஸம் வேண்டி யிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம்; சோஷலிஸம் பண்றானாம்!''
''ஸார், இந்த சௌத் ஆப்பிரிக் கன் ப்ரீமியர்...''
''அட சரித்தான், சௌத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயு மாச்சு! அடடே... மார்கெட்லே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக் காம். விலை ஏர்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம், வாரும்..!''


நன்றி : விகடன் பொக்கிஷம் (24.4.1960)

கேரக்டர் 'டவாலி' ரங்கசாமி
வா ஸார்! எங்கே ஸார் ரொம்ப நாளாக் காணோம்? கலெக்டரையா பாக்கணும்? தாராளமாப் போய் பாரு ஸார். முன்னே மாதிரியா இப்பவெல்லாம்? இன்னா இருந்தாலும் அந்தக் காலம்போல வராது ஸார்! எத்தினி கலெக்டருங் களைப் பாத்திருப்பேன்... நெல்சன் துரை, ஸ்டோன் துரை, எமர்சன் துரை, நார்ட்டன் துரை, ஆலிவ் துரை...
எம்டன் குண்டு போட்டான் பாரு ஸார், அப்ப எமர்சன் துரை குதிரை மேலே பரங்கிமலைக்குப் போறான்; நான் தொரை சானி அம்மாளை இட்டுக் கினு பங்களூருக்குப் போறேன். ஏன்? நாய்க்குட்டி புடிச்சாற. தொரைசானி அம்மாளுக்கு எம் மேலே உசிரு ஸார். 'ரங்ஸாம்... ரங் ஸாம்'னு ஓயாம கூப்பிட்டுக் கிட்டேயிருக்கும். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசும். 'ஓல்ட்மேன்'னு எங்கிட்டே ஒரு பிரியம் ஸார் அதுக்கு. அவ்வளவுதான்!
இப்பக் காலம் மாறிப் போச்சு ஸார்! வெள்ளைக் காரன் இருந்தவரைக்கும் தான் ஸார் இந்த டவாலிங்க ளுக்கு ரெஷ்பெக்ட்! இப்ப ஜிப்பா போட்டுக்கிணு 'ஈஜி'யா கலெக்டரா வந்துட றாங்க. கலெக்டரும் ஜிப்பா, குமாஸ்தாவும் ஜிப்பா, பாக்க வரவங் களும் ஜிப்பா... ஆனை, குதிரை எல்லாம் ஒண்ணாயிட்டுதே ஸார்! உடுப்புக்கு ஒரு மரியாதை வாணாம்?
பஞ்சம் வந்தது பார் ஸார், பஞ்சம்... அப்ப ஆலிவ் தொரைதான் கலெக்டர். அவன் ஒரு கெடுபிடி ஆள். பங்கா இழுக் கணும்பான். 'என்னா மேன் பட்டன்ஸூக் குப் பாலிஷ் போடலே?'ம்பான். எடுத்த துக்கெல்லாம் ஆட்பூட் இம்பான்! நான் பயந்துக்கமாட்டேன். 'நீ போடா கொரங்கு மூஞ்சி'னு தமிழ்லே திட்டிப் புடுவேன். அவனுக்கு என்னா ஸார் புரியப்போவுது?
ஒருநாள் சொல்றான் ஸார், இங்கிலீஸ்ல தான்... 'இந்த லெட்டரைக் கொண்டு போய் ஜோன்ஸ் தெரு ரோஸ் கிட்டே குடுத்துட்டு வா'ன்னு! பிரிச்சுப் பாக்க றேன், லவ் லெட்டரு! முடியாதுன்ட்டேன். என் டூட்டி இதுவா ஸார்? இவன் இன்னா செய்யமுடியும் என்னை!
ரோஸ் யார் தெரியுமா... ஆங்கிலோ இண்டியன்ஸ் பொண்ணு சார். இவனுக்கு வயசு பிப்டி ஆவுது. பாவம், அது ஸ்டூடண்ட்ஸ் பொண்ணு ஸார்! இவனுக்கு இன்னா ஸார் அதுங்கிட்டே லவ்வு? கிளியாட்டமா தொரைசானி இருக்கச்சே!
நான் முடியாதுன்னேன் பாரு, அவ்ளோதான், கரம் வச்சிக்கினான். அண்ணிக்கிலேருந்து எம்மேல பாஞ்சுக்கிட்டேயிருந்தான்.
ஒரு நாளு தொரை லேட்டா ஆபீசுக்கு வந்தான். நான் என்னா செஞ்சேன், அவன் மேஜைலேருந்து ஒரு சிகரெட்டை எடுத்து ஊதிக் கினு இருந்தேன். இத்தப் பாத்துக் கினே வந்துட்டான். அவ்ளோ தான்... 'டேய்! உன்னை ஒன் மன்த் ஸஸ்பெண்ட் பண்ணியிருக்கேன்'னான். சரின்னு வூட்டுக்குப் போயிட் டேன். பத்து நாள் கூட ஆவல்லே... தொரை கார்லே வந்து நிக்கறான். பைலு ஏதோ ஆப்படலே. தேடிப் தேடிப் பாத்திருக்கான். இந்த ரங்க சாமி இல்லாமே எந்தத் தொரை குப்பை கொட்ட முடியும்? ஒழிஞ்சு போறான்னு போய் எடுத்துக் குடுத்தேன். 'நோ ஸஸ்பெண்ட்! நாளைலேர்ந்து வேலைக்கு வரலாம்'னான். அப்புறம்தான் ஸார் போனேன்.
இப்ப இன்னா ஸார் டவாலி வேலை! அப்பப் பாக்கணும்... எடுத்ததுக்கெல்லாம் துட்டுதான்! நார்ட்டன் துரை கப்பல் ஏறச்சே எனக்கு ஒரு வெள்ளி சாஸரும் கப்பும் குடுத்துட்டுப் போனான். 'டேய், ரங்ஸாம்! சீமைக்கு எங்கூட வரியா?'னு கூப்ட்டான். இவன் களுக்குத்தான் வேறே வழியில்லே. நாட்டை வுட்டு நாடு வந்தாங்க. நான் போவனா?
முன்னே துரையைப் பார்த் துட்டு வெளியே வரவங்கள்ளாம் அனாவஷ்யமா ஒரு ரூபாயைத் தூக்கி எறிவாங்க ஸார்! இப்ப எல்லாம் போச்சு. ஒரு நாளைக் கெல்லாம் அம்பது பைசா கூடத் தேறல்லே. நீ உள்ளே போய் வா, ஸார்! இப்பத்தான் கண்டவங் கள்ளாம் நுழையறான்களே... அட, நீ போ ஸார்! உன்னைச் சொல்லல்லே!
நன்றி : விகடன் பொக்கிஷம் (28.2.1960)

கேரக்டர் 'ஜம்பம்' சாரதாம்பாள்

''சங்கரா!'' - சாரதாம் பாளின் கம்பீரமான குரல் கேட்டு, சமையல் கட்டிலிருந்த சங்கரன் ஒரு டம்ளர் சாத்துக் குடி ஜூஸூடன் ஓடி வந்தான்.
''இந்த டிரைவர் ஸ்டுடிபேகரை எடுத் துண்டு எங்கடா தொலைஞ்சான்? 'ரோமியோ'வை எங்கே காணோம்... ரெண்டு நாளா அதுக்கு உடம்பே சரியாயில்லையே? மணி எட்டாகப் போகிறதே... சாமளா இன்னும் மாடி யிலே தூங்கிண்டு இருக் காளா? டான்ஸ் வாத்தி யார் வந்து எத்தனை நாழியா காத்திண்டிருப் பார்? அவளுக்கு 'பெட் காபி' கொடுத்து எழுந் திருக்கச் சொல்லுடா! டெலிபோன் மணி அடிக்கிறது பாரு; எடுத்து யாருன்னு கேட் டுட்டுப் போ!''
''வெடர்னரி டாக்டர் வீட்டிலேருந்து டிரைவர்தான் பேசறாம்மா! 'ரோமியோ'வை டாக்டர் கிட்டே காட்டினானாம். அதுக்கு 'த்ரோட்'லே ஏதோ டிரபிளாம். நாலு நாளைக்கு அது 'ரெஸ்ட்' எடுத்துக்கணுமாம். அதிகமா குரைக்கக் கூடாதாம்!'' என்றான் சங்கரன்.
''உடம்பு சரியில்லாம இருக்கிறபோது பாவம், அதை ஏண்டா அழைச்சுண்டு போனான்? போன் பண்ணினா, டாக்டரே இங்கே வந்துட்டுப் போறார். சரி, அவனை சீக்கிரம் வரச்சொல்லு. 'ஷாப்பிங்' போகணும்!''
சாரதாம்பாள் மூச்சுவிடாமல் பேசி விட்டு, சங்கரனிடமிருந்து சாத்துக்குடி ஜூஸை வாங்கி நாசூக்காக அருந்தினாள். பிறகு இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். அப்புறம் சாவகாசமாக ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு, தன் இடது கை வைர வளையல் களை ஒரு தடவை பட்டுப் புடவையின் தலைப்பால் துடைத்துவிட்டுக் கொண்டே, விரல்களிலுள்ள மோதிரங்களைத் திருப்பித் திருப்பி அழகு பார்த்துக் கொண்டாள்.
தான் அந்த வீட்டில் கால் எடுத்து வைத்த பிறகுதான் தன் கணவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டதென்பது அவள் நினைப்பு. அந்தப் பெருமை அவள் பேச்சில் எப்போதும் மிதந்துகொண்டேயிருக்கும் வெளியிலே போனால் தன் 'ஜம்பம்'தான்! யாரைப் பார்த்தாலும் தன் குழந்தைகளின் பிரதாபம்தான். சங்கீதக் கச்சேரிக்குப் போனால், அமெரிக்காவில் இருக்கும் தன் சின்னப் பிள்ளையைப் பற்றிப் பக்கத்தில் இருக்கும் அம்மாளிடம் 'போர்' அடிப்பாள். தன் பெண்ணை மணந்துகொள்ள ஐ.ஏ.எஸ் பையன்கள் 'க்யூ' நிற்பதாக சொல்லுவாள்.
அட்வகேட் கோர்ட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டு இருந்தார். ''நாளைக்கு கல்கத்தா போகணும். டிக்கட் புக் பண்ணியாச்சு. அப்புறம் கேஸ் கீஸ்னு சொல்லா தீங்கோ...''
கல்கத்தாவில் அவள் தங்கை பெண்ணுக்குக் கலியாணம். கலியாணத்தில் எல்லோரும் சாரதாம்பாளையே வந்து வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ''என்ன மாமி! சௌக்கியமா?'' என்று கேட்டவர்களுக்கெல்லாம் ''எனக்கு இந்த கல்கத்தா க்ளை மேட்டே ஒத்துக்கலை. கலியாணம் முடிஞ்சதும் மெட்ராஸூக்குப் பறந்துடுவேன்'' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
''வெயிலே தாங்கமாட்டேங்கறது. போன வருஷம் ஊட்டிக்குப் போயி ருந்தேன். அதுக்கு முன் வருஷம் கொடைக்கானல். இந்த வருஷம் சிம்லா போகணும்னு சொல்லிண் டிருக்கேன். அவரானால் டார்ஜி லிங் போகலாங்கறார்...''
''நாயை வேற தனியா விட்டுட்டு வந்திருக்கேன். அதுக்கு உடம்பு எப்படி இருக்கோன்னு ஒரே கவலையாயிருக்கு. 'பிளேன்'லேயே போயிடலாம்னு பார்த்தா, டாக்டர் என்னை பிளேன் டிராவல் பண்ணக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கார். எனக்குப் பிளட் பிரஷரோன்னோ!''
நன்றி : விகடன் பொக்கிஷம் (6.3.1960)

கேரக்டர் 'தொழிலாளி' துளசிங்கம்

தலை முழுகினாற்போல் எண்ணெய்ப் பசையற்ற கிராப்பு; சந்தனப்பொட்டு; பனியன்; பனிய னுக்கு மேலே ஓபன் கோட்; அதற்கு மேல் வெள்ளைக்கோடு போட்ட சிவப்புக் காசிப்பட்டு; முரட்டு முக பாவம்; கையிலே ஒரு டிபன்பாக்ஸ்; கக்கத்தில் ஒரு குடை!
துளசிங்கம் வந்து ரயில் ஏற வேண்டியதுதான்... 'ஆடு-புலி' ஆட்டம் ஆரம்பமாகிவிடும்.
''இன்னா தொள்சிங்கம்... ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி 'ஜவ ஜவா'ன்னு இருக்குது?''
''தெரியாதா உனுக்கு... இந்த ஏழுமல இல்ல ஏழுமல... அட, அதாம்பா அந்த ஐனாவரத்து ஆளு... சைக்கிள் சாப்ல இருந்தானே...''
''இப்ப டாணாக்காரனாயிட் டானே, அவன்தானே?''
''அவனேதான்! ராத்திரி செகண்ட் ஸோ பாத்துட்டு சைக்கிள்ள வரேன். மூலகோத்ரம் வழியா புளியாந்தோப் புல உழுந்து, பாராவதி மேலே மெதிக்கிறேன்... இவன் குறுக்கே வந்து மறிச்சிக்கினாம்பா! வா, டேசனுக்குங்கறான்.''
''எதுக்காம்..?''
''சைக்கிள்ளே லைட் இல்லியாம். இவன் எப்டி இருந்த ஆளு... என்னி யப் பார்த்து டேசனுக்கு வான்னு கூப்படறாம்பா! கேட்டுக்கினியா கதைய? போன வெசாயக்கிழமை ரெண்டு ரூபா கைமாத்துக் கேட்டான். இல்லேப்பான்ட்டேன். அந்த ஆத்திரம் போல இருக்குது... கேசு புடிக்கிறாரு. எம் மேலே! 'காத்துல லைட் அணைஞ்சு போச்சு. இன்னம் கூட சூடு ஆறல்லே, பாரு'ன்னு அவன் கையைப் புடிச்சி 'சுடச் சுட' லைட் மேலே வெச்சு அழுத்தினேன். கையைச் சுட்டுக்கினு லபோ திபோன்னு கூவுறான். சரி, நீ தாயத்தை உருட்டு...''
உருட்டிய தாயக்கட்டை ஓடுகிற ரயிலிருந்து கீழே விழுந்து விட்டது. அவ்வளவுதான்! துள சிங்கம் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டான். இது அந்த ரயிலில் அடிக்கடி நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி!
ஆனால், அன்று புதிதாக வந்த கார்டுக்கு இந்த விஷயம் தெரியாது. ரயில் நிறுத்தப்படவே, அவர் பரபரப்புடன் கீழே இறங்கி வந்தார். துளசிங்கம் இருந்த கம்பார்ட்மென்ட்டில் வெளியே தகடு துருத்திக்கொண் டிருப்பதைக் கண்டு, ''யார் இழுத்தது?'' என்று கேட்டார்.
துளசிங்கம் தலையை வெளியே நீட்டி, ''இன்னாய்யா! இப்ப இன்னான்றே? நான்தான் இழுத்தேன்'' என்றான் கார்டைப் பார்த்து.
''காரணமில்லாமல் சங்கிலியை இழுத்தால், அபராதம் அம்பது ரூபாய்னு தெரியாதா உனக்கு?''
''குட்றா இவருக்கு அம்பது ரூபா, வாங்கிக்கினு போவாரு! யோவ்... தாயக்கட்டை உளுந்துடுச்சு. வண்டிய நிறுத்தி எடுத்துக்கினேன். இப்ப இன்னான்றே? பித்தள தாயக் கட்டைய்யா, போயிடுச்சுன்னா நீயா குடுப்பே? கொடியைக் காட்டி நீட்டா போயிக்கினே இருப்பியா... பேச வன்ட்டாரு!''
அன்று பகல் சாப்பாட்டுக்குப் பிறகு, வழக்கமாக நடைபெறும் தொழிலாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
''...சைனாவைப் பாருங்கள்; அங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...'' என்று தோழர் ஒருவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
''யோவ், நிறுத்துய்யா! அவங்க காருலே போனா நமக்கு இன்னா ஆச்சு? நம் ஊர் விசயம் பேசுவியா. அரிசி என்னா வெலை விக்குது... முதல்ல அதுக்கு ஒரு வழி பண்ணு! அத்த வுட்டு சைனாவாம், ரஸ்யா வாம்...'' என்று குறுக்கே எழுந்து குரல் விட்டான் துளசிங்கம்.
கூட்டம் துளசிங்கத்தைக் கை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்ய, பிரசங்கி அசந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.
''அரிசிலே மடக்கினாம் பாரு! அடுத்த வருஷம் நம்ப சங்கத்துக்கு தொள்சிதாம்பா தலைவரு. கன்னி யப்பன் சொகம் இல்லே...''
''தொள்சிங்கம் வாழ்க!'' என்ற கோஷத்துடன் கூட்டம் முடிந்தது.

நன்றி : விகடன் பொக்கிஷம் (26.2.1961)

கேரக்டர் 'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு

''சீ... கய்தே! இன்னாடா முறைக்கிறே! இந்த அம்மாக் கண்ணு கிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம்..! ஆப்பக் கரண்டியாலேயே போடுவேன். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே, அதப் போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? பெரிசா மீசை வச்சிக்-கினு வந்துட்டான்!''
''மோவ்... தாஸ்தி பேசாத! பாக்கி வேணும்னா மரியாதையா கேட்டு வாங்கிக்க. நான் யார் தெரியுமா?''
''நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுனரா நீ! கயித கெட்ட கேட்டுக்கு மருவா தியாம் மருவாதி! துட்டை வெச் சுட்டு ரிஸ்காவை இசுடா! கண் மறைவாவா சுத்திக்கினுக்கீறே, பேமானி!''
கூவம் நதி வாராவதிக்கு அருகில் ஒரு கட்டைத் தொட்டி. அதற்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழ்தான் அம்மாக்கண்ணுவின் ஆப்பக்கடை.
பொழுது விடிந்தால் அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ் காரர்கள், கை வண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் எல்லோரும் நாஷ்டாவுக்கு அம் மாக்கண்ணுவின் கடையைத் தான் நாடி வருவார்கள்.
அவள் சுட்டுப்போடும் ஆப்-பங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் கடன் சொல்லி-விட்டுப் போவார்கள். ஆனால் அம்மாக்-கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. டாணாக்காரர்கள் யாராவது வந்தால், ''இன்னா பல்லைக் காட்டறே? ஓசி நாஷ்-டாவா?'' என்பாள். கார்ப்பரேஷன் ஆள் வந்தால், ''இங்கே ஓசிலே துண்ணுட்டு, அங்கே போயி ஆப்பத்திலே ஈ மொய்க்கு-துன்னு கேசு எழுதிடு. ஏன்யா... ஈ மொய்க்-கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலா-மாய்யா?” என்று கேட்பாள்.
வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாகத் தோன்றினாலும், இளகிய மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர் களுக்குத் தன்னை மீறியும் உபகாரம் செய்யும் குணம் அவளிடம் உண்டு.
''பாக்கி கொடுக்க முடியலேன்னா, அதுக்காக ஏண்டா தலை தப்பிச்சுக்கினு திரியறே? பணம் கெடைக்கிறப்போ கொடு. நான் மாட்டேன்னா சொல்றேன்? இதுக்காவ நாஷ்டா பண்ண வரதையே நிறுத்திடறதா? ஒழுங்கா வந்து சாப்பிட் டுக்கினு போயிக்கினு இரு'' என்று சில ரிடம் அன்பொழுகப் பேசி அனுப்புவாள்.
''நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!''
''ஆசுபத்திரியிலே இன்னா வேலை?''
''முருவன் இல்லே... அதாம்பா, நெதைக் கும் இங்கே வந்து ஆப்பம் துண்ணுவானே, பிச்சைக்கார முருவன்... அவன் மேலே கார் மோதிடுச்சாம், பாவம்! ஆசுபத்திரியிலே படுத்-திருக்கானாம். அவனைப் போய் பாத்-துட்டு, ரெண்டு ஆப்பத்-தையும் குடுத்துட்டு வந்-துடறேன்!''
''சரி; கொஞ்சம் பொயலை இருந்தா குடுத் துட்டுப் போ!'' என்பார் நாடார்.
''உக்கும்! ஈர வெறவெல் லாம் வித்து வர துட்டை முடிபோட்டு வச்சுக்கோ'' என்று சொல்லிக் கொண்டே, இடுப்பில் உள்ள சுருக்குப் பையைத் திறந்து புகையிலையை எடுத்துக் கொடுத்து விட்டுப் போவாள்.
அம்மாக்கண்ணுவுக் குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு. மலையாளத்தார் டீக் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டு கள் கொண்டு வந்து வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அதற்காக மலையாளத் தாருக்கு 'போர்டு பாஸ்' வரும் என்பதும் அவளுக் குத் தெரியும்.
''இன்னா மலையாளம்! வாத்தியார் படம் வந்துக் குதாமே... ஒரு பாஸ் குடேன், பாத்துட்டு வரேன்'' என்று கேட்டு வாங்கிக்-கொண்டு போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து-விடு-வாள்!
நன்றி : விகடன் பொக்கிஷம் (26.2.1961)
கேரக்டர் 'சர்வர்' சந்தானம்


சினிமாக் கொட்டகை யில் 'இன்டர்வெல்' நேரம். திடீரென்று பெஞ்சு வகுப் பிலிருந்து ஒரு சீட்டிச் சப்தம் கேட்டது. ஒரு 'பரட்டைத் தலை' பெஞ்சு மேல் நின்றுகொண்டு 'பால்கனி' பக்கமாகத் திரும்பி, 'டேய்! அதோ பாருடா, சினிமா ஸ்டார் மிஸ். சந்திரா ராணி...' என்று கத்தினான். உடனே பத்துப் பதினைந்து பேர் மளமளவென்று பெஞ்சு மீது ஏறி நின்று சீட்டியடிக் கத் தொடங்கிவிட்டார்கள்.
அத்தனைக் கும்பலில், அந்த அரை வெளிச்சத்தில் சினிமா ஸ்டார் சந்திரா ராணியைக் கண்டுபிடித் தது வேறு யாருமல்ல... சர்வர் சந்தானம்தான்!
'புஸ்' என்று வளர்ந்து புதர் போல் பூத்து நிற்கும் கிராப்பு; சலவையிலிருந்து வந்த மல் ஜிப்பா; அதற் குள்ளே தெரியும் வலை பனியன்; கழுத்தைச் சுற்றிலும் 'டெக்னிக்கலர்' கர்சிப் ஒன்று; கழுத்திலே மெல்லிய சங்கிலி; நெற்றி யில் பெரிய குங்குமப் பொட்டு.
அவன் ஆஸ்தியெல்லாம் ஒரு டிரங்குப் பெட்டிதான். அந்தப் பெட்டிக்குள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, சோப்பு, ஷேவிங் செட், பவுடர் டப்பா, சினிமாப் பாட்டுப் புத்தகங் கள் இவ்வளவும் இடம் பெற்றிருக்கும். டிரங்குப் பெட்டியைத் திறந்தால் பிரபல சினிமா நட்சத் திரங்களின் வர்ணப் படங் கள் ஒட்டப்பட்டிருக்கும்.
யாராவது உப நடிகர் களோ, ஸ்டுடியோக்களில் வேலை செய்பவர்களோ, அவன் ஓட்டலுக்கு வந்து விட்டால் போதும்... அவர் களை லேசில் விடமாட் டான்!
''வாங்க அண்ணா! நீங்க 'பாட்டியே தாத்தா வின் பத்தினி' என்கிற படத்திலே காமெடியனா நடிச்சிருக்கீங்களே... நான் நேத்துதான் பார்த்தேன்! சொல்றேனேன்னு கோவிச் சுக்காதீங்க, படம் சுமார் தான்! போட்டோகிராபி மட்டம். ரிக்கார்டிங்கும் மோசம்! படம் ஓடறது உங்களாலேதான். எனக்குக் கூட சினிமாவிலே ஆக்ட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. நீங்க மனசு வைத்தால்...'' என்று ஓர் அசட்டுச் சிரிப்பு உதிரும் அவன் இதழ்களிலிருந்து.
செவ்வாய்க்கிழமை யன்று 'மனோகரா கபே'க்கு வார விடுமுறை. ஆனால், அன்றுதான் சந்தானத்துக்கு வேலை அதிகம்! காலை ஏழு மணிக்கே புறப்பட்டு விடுவான். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டுக்கருகே போய் நின்றுகொண்டு ஸ்டுடியோக்களுக்குச் செல்லும் கார்களையும், நட்சத்திரங்களையும் சென்ஸஸ் எடுத்துக்கொண்டு இருப்பான். அது முடிந்ததும் டி.நகர், காந்தி நகர், கோபாலபுரம் என்று நட்சத் திரங்கள் வாழும் க்ஷேத்திரங்களுக் கெல்லாம் ஒரு முறை போய் தரிசித்துவிட்டு வருவான்.
சினிமாப் பத்திரிகைகளில் கேள்வி பதில் பகுதியை துருவித் துருவிப் படிப்பான். தான் எழுதிப் போட்ட கேள்விக்குப் பதில் வந் திருக்கிறதா என்று ஒவ்வொரு பத்திரிகையாக வாங்கிப் பார்த்து ஏமாந்து போவான்.
எப்படியாவது சினிமாவில் தலை காட்டிவிடவேண்டும் என்று துடியாய்த் துடித்தான். சுருட்டை மயிர் இருந்தால் சினிமாவில் சேருவது சுலபம் என்று நினைத் திருந்த அவனுக்கு ஒரு சான்ஸ் கூடக் கிடைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு கிராப்பை வேறு விதமாக வாரிப் பார்த்தான். நாசூக்காக மீசை வைத்துப் பார்த்தான். குங்குமப் பொட்டைச் சிறிதாக்கினான். எதற்கும் பலன் இல்லை.
அப்புறம் ஒருநாள், அவனுக்கு ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. ஸ்டுடியோ காண்டீ னில் சர்வர் வேலைதான். ஆனால், அதற்காக அவன் வருத்தப்பட வில்லை.
தினமும் ஸ்டுடியோவுக்கு வரும் ஸ்டார்களை நேரில் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?





நன்றி : விகடன் பொக்கிஷம் (13.3.1960)

புதன், டிசம்பர் 03, 2008


கேரக்டர் 'நர்ஸ்' நாகமணி


அவளுடைய கறுத்த மேனிக்கு அந்த வெள்ளை கவுன் 'பளிச்' சென்று இருக்கும். தலையைப் பின்னி, கொண்டையாக வளைத் துக் கட்டி, நர்ஸூகளுக்குரிய பட்டை வெள்ளைத் துணியை அதன் மீது செருகியிருப்பாள்.
இரு கைகளையும் அடிக்கடி கவுன் பாக்கெட்டுகளில் விட்டுக் கொண்டு, வார்டு பாய்களை விரட்டியபடியே 'டக் டக்'கென்று நடந்து செல்வாள். ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் கீச்சுக் கீச் சென்று கத்தி, வார்டையே அதிரச் செய்வாள்.
''ஏ, முன்சாமி! இத்தினி நேரம் எங்கே போயிருந்துச்சு? நீ வர வர கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே... ஏழாம் நெம்பர் பெட் மாத்லே... இரு இரு, டாக்டர் கிட்டே சொல்லி உன்கு பய்ன் போடுது. அப்பத்தான் புத்தி வரும் உன்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு வா! டயம் என்ன ஆச்சு தெரியுமா.. டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்குறது? உன்கு மூளை இல்லே?!''
''நர்ஸியம்மா...'' - நோயாளி ஒருவருடைய குரல் இது.
''யாருது கூப்டறது? பிராக்சர் கேஸா? இன்னா ஓணும் உன்கு?''
''தண்ணி வேணும்மா...''
''தண்ணி இல்லே. சும்மா சும்மா தண்ணி குடிக்காதே. 'ஸெப்டிக்' ஆயிடும்.''
''அம்மா...''
''யாரு? ஸ்டமக் ஆபரேஷனா? ஒனுக்கு இன்னா ஓணும்?''
''வீட்லருந்து பலாப்பழம் வந்து ருக்குது. சாப்பிடலாமாம்மா?''
''நல்ல ஆலு நீ... பலாப்பளம் துன்றே? ஜாக் புரூட்! டாக்டர் வரட்டும் சொல்றேன். வயித்து வலிக்கு ஆப்ரேஷன் பண்ணிகிட்டு பலாப்பளம் துன்றியா? உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு! எங்கே அந்த பலாப்பளம்? எடு இப்டி! பாய்..! இந்தா, இதைக் கொண்டு போய் என் டேபிள் மேலே வை. நீ துன்னுப்புடாதே! வார்டு பூரா குப்பை! வாட்டர் புடிச்சு வெக்கலே; பேஸின் கொண் டாந்து வெக்கலே! போய் சீக்கிரம் கொண்டா மேன்! டிவென்டி த்ரீ பெட்டுக்கு 'பெட் பேன்' ஓணு மாம்; அட்ச்சுக்குது பார், ஓடு!''
நர்ஸ் நாகமணி, வார்டுக்குள் வருகிறாள் என்றாலே எல்லா ருக்கும் பயம்தான். எல்லோரையும் விரட்டிக்கொண்டேயிருப்பாள்.ரூல் என்றால் ரூல்தான். ரூலுக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது அவளுக்கு. நோயாளி யாக இருந்தாலும் சரி, விசிட்டர்களாயிருந்தாலும் சரி, வார்டு பாயாக இருந்தா லும் சரி... எல்லாரிடமும் ஒரே கண்டிப்புதான்.
''நர்ஸம்மா அப்படித்தான் பேசும். ஆனால், நல்ல மாதிரி'' என்பான் வார்டு பாய்.
டியூட்டிக்கு வரும்போது இருக் கும் அதட்டலும் உருட்டலும், பணி முடிந்து வெளியே போகும்போது அடியோடு மாறிவிடும். காலையில் நெருப்பு மாதிரி சீறிக்கொண்டு இருந்தவளா இப்போது இப்படிப் பச்சை வாழைப்பட்டையாக மாறி விட்டாள் என்று அதிசயிக்கத் தோன்றும்.
''என்ன செவன்ட்டீன்! நான் வரட்டுமா? நல்லாத் தூங்கணும்; மருந்து குடிக்கணும். இந்த நாகமணி வார்டுக்கு வர பேஷன்ட்டுங்க நல்லபடியாத்தான் திரும்பிப் போவாங்க'' என்று ஒவ்வொரு நோயாளியிடமும் பெருமையாகச் சொல்லிவிட்டுப் போவாள். விசிட்டர்கள் யாராவது அவளுக்கு இனாம் கொடுக்க முன்வந்தால், ரொம்பக் கோபம் வந்துவிடும் அவளுக்கு. ''இந்த நாகமணி யார் கிட்டேயும் காசு வாங்கமாட்டா. அந்த வார்டுபாய்கிட்டே கொடுங்க. பாவம், புள்ளை குட்டிக்காரன்'' என்பாள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சர்ச்; பகலில் தூக்கம். மாலையில் சினிமா; மறுபடியும் டியூட்டி! இதுதான் நாகமணியின் வாழ்க்கை.
நன்றி : விகடன் பொக்கிஷம் (27.3.1960)

கேரக்டர் 'துக்ளக்' துரைசாமி

'துக்ளக் துரைசாமி'யின் மனோபாவம் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும். சில சமயம் ஆனந்தத்தில் திளைத்திருப்பார். சில சமயம் கோபாவேசமாகி சிம்ம கர்ஜனை புரிந்துகொண்டு இருப்பார். 'யார் மீது கோபம்? எதற்காகக் கோபம்?' என்று ஒருவராலும் ஊகிக்க முடியாது.
அவருக்குக் 'குஷி' பிறந்துவிட் டாலோ சொல்லவேண்டிய தில்லை... ''எல்லோரும் இன்று ராத்திரி மொட்டை மாடியில் உட்கார்ந்து 'மூன்லைட் டின்னர்' சாப்பிடலாம்!'' என்பார்.
''இன்றைக்கு அமாவாசை. நிலா இருக்காது'' என்று யாராவது ஞாபகப்படுத்தினால், ''அது எங்க ளுக்கும் தெரியும்; மூன் இல்லா விட்டால் மெர்க்குரி லைட்!'' என்பார்.
அவரிடம் எதுவும் நிரந்தரம் கிடையாது. சித்தன் போக்கு, சிவன்போக்கு என்பார்களே அப்படித்தான். ஒரு சீசனில் சிகரெட் புகைத்துக்கொண்டு இருப்பார். இன்னொரு சீசனில் சிகரெட்டைத் துறந்துவிட்டு வெற்றிலை சீவலாகப் போட்டுத் துப்பிக்கொண்டிருப்பார்.
வைத்தியத்திலும் ஒரே மாதிரி சிகிச்சை இருக்காது. இன்று அலோபதி; நாளை ஹோமியோ பதி; மறுநாள் சீதாபதி! பேசும் பாஷையும் அப்படித்தான்.
ஒரு சீசனில், தோட்டத்தைப் பார்த்தால் இங்கிலீஷ் குரோட் டன்ஸாயிருக்கும். இன்னொரு சீசனில் அதெல்லாம் போய் புடலும் வாழையும் அவரையும் கீரையுமாய்க் காணப்படும்.
உணவு வகையிலும் இத்தகைய கலப்புகள் உண்டு. ரொட்டிக்கு சாம்பார், தோசைக்கு ஜாம்! இட் லிக்கு பெப்பர் அண்டு சால்ட்!

ஒரு நாள் பால்காரன் லேட் டாக வந்தான் என்பதற்காக அவன் மீது கோபித்துக்கொண்டு, சொந்தத்தில் இரண்டு பசுமாடு களே வாங்கிவிட்டார்.
'முளைக்கீரை வளர்த்துப் பசுமாட்டை மேயவிட்டால், பாலில் கால்ஷியம் சத்து அதிகமாகச் சேரும்' என்று அவருக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவர் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்: அன்றே தோட்டத்திலிருந்து செடி கொடிகளையெல்லாம் - துளசி மாடம் உள்பட - வெட்டி எடுத்துவிட்டுத் தோட்டம் முழுவதும் முளைக்கீரையாக விதைத்து விட்டார். போதாக்குறைக்கு அந்த வைத்தியரையும் அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொண்டு, முளைக்கீரை மேய்ந்த பசுவின் பாலினால் தயாரிக்கப்பட்ட காபியை அவருக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டு மகிழ்ந்தார்.
ஒரு நாள், சமையல் காரன் தோட்டத்தில் வளர்ந்திருந்த முளைக்கீரையைப் பிடுங்கி வந்து சமையல் செய்துவிட்டான். அவ்வளவுதான்... துரைசாமிக்கு வந்து விட்டது கோபம்!
''மாட்டுக்கு வளர்த்த கீரையை என் உத்தரவு இல்லாமல் எப்படி நீ சமையலுக்கு எடுத்து வரலாம்?'' என்று ஆவேசம் வந்தவர்போல் பெருங்கூச்சலிட் டார். சமையல்காரன் டிஸ்மிஸ்! மூன்று நாள் ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட் டது. கடைசியில் துரைசாமிக் குக் கோபம் தணிந்ததும், ''அந்த சமையல்காரனை எங்கிருந்தா லும் தேடி அழைத்து வர வேண் டும்'' என்று உத்தரவு போட்டார்.
''அந்த வைத்தியர் வீட்டை விட்டுத் தொலைந்தால்தான் நான் வருவேன்'' என்று நிபந் தனை போட்டான் சமையல் காரன்.
''வைத்தியர் என்ன... மாடு, கீரை, பயிர் எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறேன். நீ வா!'' என்றார் துரைசாமி.
வைத்தியர் போனார்; சமையல்காரன் வந்தான். தோட்டத்திலிருந்த கீரைப் பாத்திகளையெல்லாம் மாற்றி மறுபடியும் குரோட்டன்ஸ் போட்டாயிற்று!


நன்றி : விகடன் பொக்கிஷம் (5.2.1961)