புதன், டிசம்பர் 03, 2008


கேரக்டர் 'துக்ளக்' துரைசாமி

'துக்ளக் துரைசாமி'யின் மனோபாவம் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும். சில சமயம் ஆனந்தத்தில் திளைத்திருப்பார். சில சமயம் கோபாவேசமாகி சிம்ம கர்ஜனை புரிந்துகொண்டு இருப்பார். 'யார் மீது கோபம்? எதற்காகக் கோபம்?' என்று ஒருவராலும் ஊகிக்க முடியாது.
அவருக்குக் 'குஷி' பிறந்துவிட் டாலோ சொல்லவேண்டிய தில்லை... ''எல்லோரும் இன்று ராத்திரி மொட்டை மாடியில் உட்கார்ந்து 'மூன்லைட் டின்னர்' சாப்பிடலாம்!'' என்பார்.
''இன்றைக்கு அமாவாசை. நிலா இருக்காது'' என்று யாராவது ஞாபகப்படுத்தினால், ''அது எங்க ளுக்கும் தெரியும்; மூன் இல்லா விட்டால் மெர்க்குரி லைட்!'' என்பார்.
அவரிடம் எதுவும் நிரந்தரம் கிடையாது. சித்தன் போக்கு, சிவன்போக்கு என்பார்களே அப்படித்தான். ஒரு சீசனில் சிகரெட் புகைத்துக்கொண்டு இருப்பார். இன்னொரு சீசனில் சிகரெட்டைத் துறந்துவிட்டு வெற்றிலை சீவலாகப் போட்டுத் துப்பிக்கொண்டிருப்பார்.
வைத்தியத்திலும் ஒரே மாதிரி சிகிச்சை இருக்காது. இன்று அலோபதி; நாளை ஹோமியோ பதி; மறுநாள் சீதாபதி! பேசும் பாஷையும் அப்படித்தான்.
ஒரு சீசனில், தோட்டத்தைப் பார்த்தால் இங்கிலீஷ் குரோட் டன்ஸாயிருக்கும். இன்னொரு சீசனில் அதெல்லாம் போய் புடலும் வாழையும் அவரையும் கீரையுமாய்க் காணப்படும்.
உணவு வகையிலும் இத்தகைய கலப்புகள் உண்டு. ரொட்டிக்கு சாம்பார், தோசைக்கு ஜாம்! இட் லிக்கு பெப்பர் அண்டு சால்ட்!

ஒரு நாள் பால்காரன் லேட் டாக வந்தான் என்பதற்காக அவன் மீது கோபித்துக்கொண்டு, சொந்தத்தில் இரண்டு பசுமாடு களே வாங்கிவிட்டார்.
'முளைக்கீரை வளர்த்துப் பசுமாட்டை மேயவிட்டால், பாலில் கால்ஷியம் சத்து அதிகமாகச் சேரும்' என்று அவருக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவர் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்: அன்றே தோட்டத்திலிருந்து செடி கொடிகளையெல்லாம் - துளசி மாடம் உள்பட - வெட்டி எடுத்துவிட்டுத் தோட்டம் முழுவதும் முளைக்கீரையாக விதைத்து விட்டார். போதாக்குறைக்கு அந்த வைத்தியரையும் அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொண்டு, முளைக்கீரை மேய்ந்த பசுவின் பாலினால் தயாரிக்கப்பட்ட காபியை அவருக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டு மகிழ்ந்தார்.
ஒரு நாள், சமையல் காரன் தோட்டத்தில் வளர்ந்திருந்த முளைக்கீரையைப் பிடுங்கி வந்து சமையல் செய்துவிட்டான். அவ்வளவுதான்... துரைசாமிக்கு வந்து விட்டது கோபம்!
''மாட்டுக்கு வளர்த்த கீரையை என் உத்தரவு இல்லாமல் எப்படி நீ சமையலுக்கு எடுத்து வரலாம்?'' என்று ஆவேசம் வந்தவர்போல் பெருங்கூச்சலிட் டார். சமையல்காரன் டிஸ்மிஸ்! மூன்று நாள் ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட் டது. கடைசியில் துரைசாமிக் குக் கோபம் தணிந்ததும், ''அந்த சமையல்காரனை எங்கிருந்தா லும் தேடி அழைத்து வர வேண் டும்'' என்று உத்தரவு போட்டார்.
''அந்த வைத்தியர் வீட்டை விட்டுத் தொலைந்தால்தான் நான் வருவேன்'' என்று நிபந் தனை போட்டான் சமையல் காரன்.
''வைத்தியர் என்ன... மாடு, கீரை, பயிர் எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறேன். நீ வா!'' என்றார் துரைசாமி.
வைத்தியர் போனார்; சமையல்காரன் வந்தான். தோட்டத்திலிருந்த கீரைப் பாத்திகளையெல்லாம் மாற்றி மறுபடியும் குரோட்டன்ஸ் போட்டாயிற்று!


நன்றி : விகடன் பொக்கிஷம் (5.2.1961)

கருத்துகள் இல்லை: