திங்கள், டிசம்பர் 22, 2008

நகைச்சுவை மேதை!



மாமேதைகள் மறைவதில்லை!

சமகாலத்தில் வாழ்ந்து நம் கண்ணெதிரிலேயே மறைந்த மாமனிதர்கள் வரிசையில் தற்போது நகைச்சுவை வேதாந்தி சார்லி சாப்ளினும் சேர்ந்திருக்கிறார். ஏசு கிறிஸ்து பிறந்த திருநாளில் இவரது ஆவி பிரிந்த செய்தியைக் கேட்டபோது, மிக நெருங்கிய உறவினர் ஒருவரைப் பறி கொடுத்த துயரம் நம் நெஞ்சை அடைத்தது.
மாபெரும் சிந்தனையாளர்கள் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமக்குத் தெம்பூட்டுகிறது. அவர்கள் மறைவு ஒரு சூன்யப் பெருவெளியைத் தோற்றுவித்து நம்மைப் பெரும் ஏக்கத்திற்குள்ளாக்கிவிடுகிறது.
ஆயினும், இவர்களது படைப்புகள் நெஞ்சில் நிலைத்து வரலாற்றில் கலந்து, மனித இனத்தின் நம்பிக்கைக்கு உரமாகி அதன் மேம்பாட்டுக்கு உறுதுணையாயிருக்கின்றன.




நன்றி - 8.1.1978 விகடன் இதழ் தலையங்கத்திலிருந்து

ஞாயிறு, டிசம்பர் 21, 2008

கேரக்டர் 'அப்பச்சி' அருணாசலம்


கேரக்டர் 'அப்பச்சி' அருணாசலம்


''யாருங்கறேன் அது? கானாடுகாத்தான் கருப்பய்யாச் செட்டியாரா? வாங்க, இருங்க. மெட்ராசுக்கு எப்ப வந்தீக? உங்க அப்பச்சி எப்படி இருக் காக? பானா, மூனா, லேனா, சோனா லெச்சுமணஞ் செட்டி யார் மகனுக்குப் போன மாசம் கோட்டையூர்லே கல்யாணம் நடந்துதாமில்லே? ஏங்கறேன்... என்ன செலவாகியிருக்கும்? வாணத்தைக் கொளுத்தி வானத்திலே விட்டாகளாமே!
ஊம்... பையனைச் சீமைக்கு அனுப்பி படிக்க வெச்சாகளாம். அவன் திரும்பி வந்து சிகரெட்டு புடிக்கிறானாம். ஏங்கறேன்... இதைக் கத்துக்க சீமைக்கா போகணும்?
காத்துலே பறக்குமே, அதென் னங்கறேன், ஏரோப்ளான்! அந்த வண்டியிலேதானாமில்லே போய் வந்தானாம்? ஏம் போக மாட்டாக? அவுக பரம்பரையா மலேயாவிலே வட்டி வியாபாரம் செஞ்சு, லெச்சம் லெச்சமாகக் குவிச்சு வெச்சிருக்காக. நமக்கு முடியுமாங்கறேன்? என்ன ஆனா மூனா கானா, ஏம் பேசாம இருக் கீக? நீங்க சொல்லுங்க, நமக்கு எதுக்கு இந்தப் பட்டண வாசமெல்லாம்? அதைச் சொன்னா நம்ம மகன் கேக்கறானில்லே...''
அப்பச்சி அருணாசலம் செட் டியார் தமது கைக் கோலால் தரையைத் தட்டிக் கொண்டே, அந்த பங்களாவின் வராந்தாவிலுள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தபடி, வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தம் மகனைப் பற்றி இப்படி ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பார்.
''ஏன்? உங்க மகனுக்கென்ன? நல்லாத்தானே பிசினஸூ பண் ணிக்கிட்டிருக்காக?'' என்பார் ஆனா மூனா கானா.
''என்னங்கறேன் நீங்க ஒண்ணு! உங்களுக்குத் தெரியாதா? தேவ கோட்டையிலே கப்பலாச்சும் வீடு. இருக்கிற சொத்தை வெச்சு இன்னும் நாலு தலைமுறைக்கு கால் மேலே கால் போட்டுச் சாப்பிடலாம். இந்த மெட்ராசுலே நமக்கு என்னய்யா வேலை? கேட்டா பிசுனஸூ பண்ணிக்கிட் டிருக்கேங்கறான். வீட்டிலே தங்க றானா? இவனுக்கெதுக்குங்கறேன் இந்த வேலையெல்லாம்?
ஒரு லெச்சம் செலவளிச்சு இந்த பங்களாவைக் கட்டியிருக் கான். நமக்கெதுக்கு இந்தப் பட்ட ணத்திலே பங்களாவும் காரும்? ஊரிலே கோட்டை மாதிரி வீட்டைப் பூட்டி வெச்சிருக்கோம். கட்டி அணைக்க முடியாதுங் கறேன் ஒவ்வொரு கம்பமும். என்னங்கறேன்... உங்களுக்குத் தெரியாததா?
அதையெல்லாம் விட்டுப் போட்டு மெட்ராசுலே பிசுனஸூ பண்றானாம்! சரி, பண்ணட்டும். இந்த நாயை எதுக்குங்கறேன் நானூறு ரூபாய் கொடுத்து வாங் கணும்? அது இருந்தாத்தான் பங்களாவுக்கு அளகாம்! அது சும்மாவா இருக்குது? ரொட்டியைக் கொண்டாங்குது! மட்டனைக் கொண்டாங்குது! சும்மா இருக்குற நேரத்துலே என்னைப் பார்த்து உர் உர்ருங்குது. சரி, போவட்டும்; இவ்வளவு பெரிய தோட்டம் எதுக்குங்கறேன்? தோட்டம்னா சும்மாவா? தோட்டக்காரனுவ நாலு பேரு. இவனுக என்ன பண்றானுவ? ஒரு கத்திரிச் செடி உண்டா? ஒரு வெண்டைச் செடி உண்டா? எல்லாம் இங்கிலீசு பூ இல்லே பூக்குது. ஏங்கறேன்? அந்தப் பூ எதுக்கு ஒதவும்? சொல்லுங்கறேன்.
என்ன, ஆனா மூனா கானா? என்ன பேசாம இருக்கீக? குளந்தை களுக்கு ஒரு திருவாசகம், ஒரு தேவாரம் தெரியுமா? எல்லாம் இங்கிலீசு படிப்பில்லே படிக்கிறாக. அதாங்கறேன், கான்வென்ட்டா மில்லே கான்வென்ட்டு... நூறு நூறாப் பணத்தைப் பறிக்கிறாகளே. அந்த ஸ்கோல்லே படிக்கிறாக ளய்யா! நீங்களும் நானும் அந்தக் காலத்திலே கான்வென்ட்டா படிச் சோம்? அதனாலே இப்ப என்னங் கறேன், கெட்டாப் போயிட்டோம்? இதைச் சொல்லப்போனா 'இந்தக் கௌத்துக்கு என்ன வேலை? போட்டதைச் சாப்பிட்டுட்டுப் பேசாமே ஊஞ்சல்லே விளுந்து கிடக் கிறதுதானே'ம்பாக இல்லையா?''


நன்றி : விகடன் பொக்கிஷம்


வெள்ளி, டிசம்பர் 19, 2008

சுஜாதா - உபக்கிரகம்

பட்டாபிராமன் தினம் போல் சாயங்காலம் நடப்பதற்குக் கிளம்பினார். ரிட்டயர் ஆனதிலிருந்து அது இப்போது பத்து வருஷமாகிறது. அதிக நாள்கள் இந்த வாக் தவறினதில்லை. பட்டாபிராமன் நிறைய நாள் வாழ்ந்திருக்க விரும்பினார்.




தினசரி மூன்று மைல் நடந்தால் நிறைய நாள் வாழலாம் என்று டாக்டர் சொன்னார். ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தார். டவுனுக்கு வெளியே வந்து மைதானத்துக்குக் குறுக்கே நடந்து, சன்னமாக மேல ஏறி இறங்கும் ஹை கிரவுண்ட் பகுதியில் நடந்து செல்வது அவருக்கு மிகவும் விருப்பம்.
அவர் செல்லும் சமயத்தில் அவைரத் தவிர வேறு ஒருவரும் இருக்க மாட்டார்கள். தனக்குத்தானே இரைந்து பேசிக்கோள்ளலாம். அவர் மைனவி, மகள், மகன் எல்லோரும் சுத்தமாக அவர் இறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று சில சமயம் அவருக்கு வரும் சந்தேகங்கைளஎல்லாம் தனக்குத்தானே வாதப் பிரதிவாதம் செய்து கொள்ளலாம். மேலும், பச்சைப் புல்வெளியில் மெத்துமெத்தென்று நடப்பது அவருக்குப் பிடிக்கும். தன் சென்ற காலத்தை அசைபோட்டுக்கொண்டே டிராஃபிக் பயமில்லாமல் உத்தமமான தனிமையில் நடக்கலாம். நடந்து சென்றுகொண்டு இருந்தார் என்றும் போல் மாலை. என்றும் போல் ஐந்து பதினெட்டு. என்றும் போல் கழுத்ைதச் சுற்றி மஃப்ளர். கையில் வாக்கிங் ஸ்டிக், காலில் கான்வாஸ் ஷூக்கள். என்றும் போல் தனக்குள் பேச்சு. ஆனால், என்றும் போல இல்லாமல் இன்று ஒரு விநோதம் நடந்தது.



சமீபத்திய மழையில் பளர் என்று பச்ைச நிைறந்துவிட்ட அந்தப் பிரேதசத்தில் நடந்துகொண்டு இருந்தேபாது 'விஷ்' என்று உயரே அவர் பின்னே ஒரு சத்தம் கேட்டது



அந்தச் சத்தத்தை அவர் முதலில் கவனிக்கவில்லை. அதன்பின் அந்தச் சத்தத்தில் அதிகரித்த புதுமை அவர் கவனத்தை நிச்சயம் ஈர்த்தது. அந்த 'விஷ்' சரியாக விவரிக்க, மொழியில் வார்த்தை இல்லை. உடலைச் சிலிர்க்கைவக்கும் சத்தம். திரும்பிப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை.


மேல பார்த்தார். திடுக்கிட்டார்.

ஆகாயத்தில் சுமார் முந்நூறு அடி உயரத்தில் பளபளக்கும் ஒரு கோளம்

திங்கள், டிசம்பர் 15, 2008

ஜெயகாந்தன் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு! பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது. அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான். அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள். ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம். ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள். ஆண்டி 'ஒரு மாதிரியான' ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை 'ஒரு மாதிரி' என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான். அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும். 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...' குழி வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால் தான் அந்த இடுகாடு கூட 'நந்தவன' மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்ன வென்றே தெரியாது. செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங்களுக்கு குழி பறிக்கும் போதும் சரி - சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டை தனது கரகரத்த குரலில் பாடுவான். அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு அர்த்தம் கிடையாது; வெறும் பழக்கம்தான். அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தைகளின் பிரேதம்தான் அங்கு வரும். 'மூன்றடி நீளம் மூன்றடி ஆழ'க் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல. தலையின் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அனாயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும். ஒவ்வொரு வெட்டுக்கும் ஈர மண் மடிந்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும். '... கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்கூத்தாடிக்... கூத்தாடிப்... போட்டுடைத்தாண்டி...' அந்தக் 'கூத்தாடி' என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனை யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிறான் என்றே எண்ணத் தோன்றும். உண்மையில் அந்தப் பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது. அவன் அந்தப் பாட்டை, எங்கு எப்பொழுது கற்றுக் கொண்டான்? நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷமான வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம். ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான்? சற்று நினைவு கூர்ந்தால் அவனால் சொல்லிவிட முடியும். ---·---·---·---· ஒரு நாள் காலை, கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கலைந்து எழுந்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்ட பின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. குடிசை வாசலில், கிழிந்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாறாக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிறாள் முருகாயி. அவன், தான் எழுந்தபின் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை, கலியாணம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை. "ஏ... முருவாயி..." என்று குரல் கொடுத்தான். அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள். அவன் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தான். 'உடம்பு சுடுகிறதோ' என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. "முருவாயி..." என்று மறுபடியும் உலுப்பினான். மயங்கிக் கிறங்கிய நிலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரில் புருஷன் குந்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தாள். "என்ன முருவாயி... ஒடம்புக்கு என்னா பண்ணுது?" என்று பதறினான் ஆண்டி. "ஒண்ணுமில்லே... கையி காலெல்லாம் கொடைச்சலா இருக்கு... ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி... கிர்னு தலை சுத்துது..." என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டி ஒட்டிப் பிரிந்தன. "கனா ஒண்ணு கண்டேன்." "என்ன கனா புள்ளே?" முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள். "கனாவிலே ஒரு பூச்சி... கறுப்பா... சின்னதா..." அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று. "உம்..." "சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்... அந்தக் கறுப்புப் பூச்சி நவுந்து வந்து எங் கையி மேலே ஏறுச்சி... ஏறினவுடனே அது மஞ்சளா மாறிச்சி - ஊஹீம் மஞ்ச நெறமில்லே... தங்க நெறம்... அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சது... அது எங் கையிலே வந்து குந்திக்கிட்டு... 'என்னெத் தின்னுடு என்னெத் தின்னுடு'ன்னு சொல்லிச்சு." "உம் அப்புறம்?..." "தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சது. எனக்கு என்னவோ புத்திக் கொளம்பிப்போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி... சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து 'தின்னுடு தின்னுடு'ன்னு சொல்லுது பாத்தியா?... நாம்ப திங்கமாட்டோம்கிற தைரியம் தானேன்னு நெனைச்சி..." - அவள் முகம் சிவந்தது, சுளித்தது! "ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு 'கச முச'ன்னு மென்னு...வ் வோ ஓ!..." - அவள் சொல்லி முடிக்கவில்லை, குடலை முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது; தலை கனத்தது; மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க, "வ் வோ ஓ!..." "மச்சான்... மச்சான்... அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது மச்சான்..." மறுபடியும் ஓர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்துகொண்டே தலை குனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ் நீர் சுரந்து ஒழுகியது. "மச்சான்... வவுத்திலே பூச்சி" - ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுதும் இன்பக் கிளுகிளுப்பு ஓடிப் பரவியது. பதினைந்து வருஷமாய் வாய்க்காதது... எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போனபின்... - உடலை குலுக்கி, குடலை முறுக்கி ஓங்கரித்தாள்... முருகாயி. - "ஆ... அதுதான் ஹாஹா... முருகாயி அதுதான்... ஹாஹா!" ஆண்டி சிரித்தான். "வ்வோ ஓ!..." - குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான். "ஹாஹாஹ்ஹா... அதுதான் புள்ளே, அது தான்." பலத்த ஓங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி. "மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!..." என்று பதறினாள். "சும்மா, இரு புள்ளே, நம்ம வடிவேலு வைத்தியர் கிட்டே போயி எதனாச்சும் மருந்து வாங்கியாறேன்" என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு கிளம்பினான் ஆண்டி. முருகாயி சிரித்தாள். "ஏ! சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கப் போறாங்க" "நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியலியே புள்ளே..." "நீ ஏன் பாக்கிறே?...அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க..." ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடுகாட்டின் கேட்டருகே நின்றான். அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி." இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில் மகிழ்ச்சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாள லயம் தவறாமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய்ப் பதிந்தன. அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான். அன்றுமுதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" ஆயிரக்கணக்கான மனித உடல்கள் மாண்டபின் புதையுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான். ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதூகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை. பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினான். நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சவங்களுக்குக் குழிபறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அணைத்து ஆரத் தழுவின. - தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்ந்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன. ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை. ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனைப் போல பாட்டுப் பாடிக்கொண்டே குழி பறிப்பான். அருகிலிருக்கும் அந்தப் பச்சைச் சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் - அதோ பக்கத்தில், பீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் - நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறானே... சீசீ இவனும் ஒரு மனிதனா!... அதனால்தான் அவனை எல்லோரும் 'ஒரு மாதிரி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். குழி பறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான். அந்த மகிழ்ச்சிக்கு, குதூகலத்திற்கு, பாட்டிற்கு, கும்மாளத்துக்கெல்லாம் காரணம் இருளன்தானா? இரண்டு ஆண்டுகளுக்குப் பின்... எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு, கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து, ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் குதித்துக் கொண்டிருந்த ஆண்டியின்... ஆண்டியின்... - சொல்ல என்ன இருக்கிறது? இருளன் ஒருநாள் செத்துப் போனான். வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து காலம் போன ஒரு நாளில், எதிர்பாராமல் - நினைவின் நப்பாசை கூட அறுந்துபோன ஒரு காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்ததுபோல் போய்விட்டான். ஆசைகளையும் கனவுகளையும், பாழுக்கும் பொய்மைக்கும் பறி கொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள். எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப்போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பாரி வைத்து அழுதாள். வேப்ப மரத்தடியில், கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே, முழங்கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிறான் ஆண்டி. எங்கோ வெறித்த விழிகள்... என்னென்னமோ காட்சிகள்... எல்லாம் கண்டவை... இனி, காண முடியாதவை... அதோ இருளன்! - வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்... தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தலையை மட்டும் தூளிக்கு வெளியே தள்ளித் தொங்க விட்டுக் கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் 'அப்பா' வென்று அழைத்ததும்... செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அவனறியாமல் பின்னே வந்து, திடீரென்று பாய்ந்து புறம் புல்லி உடலைச் சிலிர்க்கவைத்து மகிழ்வித்ததும்... எதிரிலிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து - தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு, பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்... நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்... - பொய்யா?... கனவா?... மருளா?... பித்தா?... பேதைமையா? ஆண்டி சித்தம் குலைவுற்றவன் போல் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. அதோ குடிசையினுள்ளே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப் புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும் ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு; கறுத்துப் போன இதழ்களுக்கிடையே பால் மணம் மாறாத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு... - ஆழ்ந்த நித்திரையோ?... 'இல்லை செத்துப் போய்விட்டான்.' வெகுநேரம் தன் செல்வ மகனின் - இனிமேல் பார்க்க முடியாத மகனின் - முகத்தை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான். வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன. மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி, பூமியில் பதித்தான். 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி!' அந்தப் பாட்டு!... அவன் பாடவில்லை. ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு... 'பாடியது யார்?'... மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான். 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' - மீண்டும் அந்தக் குரல்!... 'யாரது!...' புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான். மீண்டும் ஒரு குரல்: "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்நாலாறு மாதமாய் குயவனை வேண்டி..." 'ஐயோ! அர்த்தம் புரிகிறதே!'... - ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். தூணைப் பிளந்து வெளிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று, பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வெளிவந்தான். கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாடியது சிசு! "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி...கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி..." குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்கு முன் புதையுண்ட முதற் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர்பெற்று, உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து, விம்மிப் புடைத்து விகஸித்த குரலில் - மழலை மாறாத மதலைக் குரலில் - பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வெளியெல்லாம் திசைகெட்டு தறிகெட்டுத் திரிந்து ஓடின. ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான். அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிறான். தாளம் போடுகிறான். பாட்டுப் பாடுகிறான். என்ன பாட்டுத் தெரியுமா?... 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' அடைத்துப் புடைத்து நெருக்கிக்கொண்டு ஓடும் சிசுக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனை தாவி அணைக்க ஓடினான்... இருளனைக் காணோம்... தேடினான், காணோம்... இருளனை மட்டும் காணவே காணோம்... அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும் இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்!... ஆண்டி தவித்தான்! ஆ!... என்ன தவிப்பு... என்ன தவிப்பு... பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடினாள் முருகாயி. அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக் கொண்டு கதறினாள். அவன் விழிகள் மெல்லத் திறந்தன. - தெய்வமே! அவனுக்கு உயிர் இருந்தது; அவன் சாகவில்லை. இன்னும் கூட அவன் அந்த 'நந்தவன'த்தில் தான் வாழ்கிறான். ஆனால் முன்போல் இப்போதெல்லாம் பாடுவதில்லை. இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கோ'வென்று கதறி அழுகிறான். ஊராரின் ஒவ்வொரு சோகத்திற்கும் அவன் பலியாகிறான்! ஆனால் இப்பொழுதும் ஊரார் அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள்!

ஜெயகாந்தன் - தேவன் வருவாரா?

பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள்' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌ¢யே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது. 'நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போணா?" கிழவிக்கு நெஞ்சு படபடத்தது. இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை. சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது. "அதாரு? சின்னப் பொண்ணா...ஏ, சின்னப் பொண்ணு' எங்க அழகம்மா எங்கே? உங்க கூட வரலியா?....""நாங்கல்லாம் ஒண்ணாத்தான் வந்தோம் ஆயா.....வழியிலே எங்கனாச்சும் பூட்டாளோ என்னமோ, தெரிலியே....."குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தாள் ஆரோக்கியம். எதிரில் வரும் பெண்களை எல்லாம் நிறுத்தி விசாரித்தாள். "எங்க அழகம்மாளைப் பார்த்தீங்களா, அழகம்மாவை?"எல்லோரும் பார்த்ததாகத்தான் சொன்னார்கள். அவள் எங்கே என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.சேரித் தெரு முனையில் உள்ள சாயபுக் கடையில் ஒரே கும்பல்...' அந்தக் கும்பலில் இருப்பாளோ' '--கிழவி சாயபுக் கடையை நோக்கி ஓடினாள். கடையில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது; அழகம்மாளைத்தான் காணோம்."ஏ' ஐயோ, கடைக்கார ஐயா...எங்க அழகம்மா இந்தப் பக்கம் வந்தாளா, பாத்திங்களா ஐயா?...""அட போம்மா, ஒனக்கு வேறே வேலையில்லே...நீ ஒரு பைத்தியம், அந்தப் பைத்தியத்தைத் தேடிக்கிட்டுத் திரியறே? எங்களுக்கு வேறே வேலையில்லியா?" என்று எரிந்து விழுந்தான் கடைக்கார சாயபு--அவனுக்கு வியாபார மும்முரம்.பைத்தியம்;--அந்த வார்த்தையைக் கேட்டதும் கிழவிக்கு நெஞ்சில் உதைத்தது போலிருந்தது.ஆமாம்; இரண்டு மாதத்துக்குமுன் அழகம்மாள் பைத்தியமாகத்தான் இருந்தாள். இதே தெருவில், குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டு, எச்சில் இலை நக்கிப் பசி தீர்த்துக் கொண்டு, 'ஆடை பாதி, ஆள் பாதி' க் கோலத்துடன் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்தவள்தான் அழகம்மாள்."இப்ப இல்லியே......இப்பத்தான் அழகம்மாளுக்குப் பைத்தியம் தௌ¢ஞ்சு போச்சுதே' " கிழவியின் உதடுகள் முணுமுணுத்தன. எப்படித் தௌ¢ந்தது? கிழவிக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அது ஓர் புரியாத, நம்ப முடியாத புதிர், பேராச்சரியம்'இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழவி ஆரோக்கியம் மாதா கோயிலுக்குப் போகும் போது, மாதாகோயில் சாலையின் ஓரத்தில் உள்ள மணல் திடலில், ஓங்கி வளர்ந்திருந்த இரண்டு ஒதிய மரங்களுக்கு இடைவௌ¢யில் உடலை மறைத்துக்கொண்டு 'ஆயா ஆயா' என்று பரிதாபமாகக் கூவினாளே, அழகம்மாள்...அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?"ஆயா, நானும் உன்னை மாதிரி ஒரு மனுசப் பிறவி தானே?...ஒரு பொம்பளைப் பொண்ணு கட்டத் துணி இல்லாம முண்டமா நிக்கிறேனே, பாத்திக்கிட்டே போறியே ஆயா..." என்று கதறியழுதாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?அழகம்மாளின் அந்தக் குரல்... பத்து வருஷங்களுக்கு முன் தன்னை வெறுத்துவிட்டு யாருடனோ எங்கோ ஓடிப்போய்விட்ட மகள் இஸபெல்லாவின் நினைவைக் கொண்டுவந்தது.கிழவி குரல் வந்த திக்கை வெறித்துப் பார்த்தபோது, இடுப்புக்குக் கீழே ஒரு முழக் கந்தைத் துணியை, எட்டியும் எட்டாமலும் இருந்ததால் பக்கவாட்டில் முடிந்து கட்டிக் கொண்டு, காதலனைத் தழுவுவதுபோல் மரத்தோடு மார்பைச் சேர்த்து இணைத்து மறைத்தவாறு, தலையை மட்டும் திருப்பிக் கழுவில் ஏற்றிய குற்றவாளி போல் நின்று கதறும் அவள் இஸபெல்லாவா?...அழகம்மாளா?...யாராயிருந்தால் என்ன? பெண்'கிழவி அன்று மாதா கோயிலுக்குப் போகவில்லை. குடிசைக்கு ஓடோடியும் வந்து தன்னிடமிருந்த கந்தல் புடைவை ஒன்றை எடுத்துக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்தாள். உடுத்திக் கொண்டதும் கண்கள் கலங்க, கரம்கூப்பிக் கும்பிட்டவாறு, "ஆயா, நீதான் எனக்குத் தாய், தெய்வம்..." என்று கூவிக் காலில் விழுந்தாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?ஆரோக்கியம் அழகம்மாளை வாரி அணைத்துக்கொண்டு, "நீதான் எனக்கு மகள்..." என்று கண்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியக் கூறினாளே..."இருவர்க்கும் இருவர் துணையாகி -- நாளெல்லாம் மாடாய் உழைத்து, பிச்சை எடுத்துக் கால்வயிறு கழுவிக் கொண்டிருந்த கிழவி ஆரோக்கியத்திற்கு முழு வயிறு சோறு போடுகிறாளே, அவளா பைத்தியம்?'இல்லை: என் அழகம்மா பைத்தியமில்லை' என்று தீர்மானமாய்த் தலையை ஆட்டிக்கொண்டாள் கிழவி. பிறகு மாதாகோயில் சாலைவழியே தன் அழகம்மாளைத் தேடி நடந்தாள்.அந்த இடம் ரொம்ப அழகான பிரதேசம், பிரபலமாகப் பேசப்படும் காஷ்மீராகட்டும், கன்னியாகுமரியாகட்டும் அல்லது உலகின் பேர்போன எந்த உல்லாசபுரியாகட்டும்--அங்கெல்லாம் பிறக்காத ஒரு லயிப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வரண்ட பிரதேசத்திலோ, சந்து பொந்திலோ ஏற்பட்டுவிடத்தான் செய்யும். மற்றவர் கண்ணுக்கு 'இது என்ன அழகு' என்று தோன்றும் இந்த இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும். அழகம்மாளுக்கும் அப்படித்தானோ? அவள் பைத்தியமாக இருக்கும்போதுகூட அந்த இடத்தில்தான் அடிக்கடிக் காணப்படுவாள். மரங்களும், சிறு கற்பாறைகளுள், மணற் குன்றுகளுக் நிறைந்த அந்தத் திடலில், கண்ணுக்கெட்டிய தூரம் காடாகக் கிடக்கும் அந்தத் திடலின் ஒரு ஓரத்தில், இரண்டு ஒதிய மரங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அவள் சாய்ந்தும், கிடந்தும், இருந்தும், நின்றும் பொழுதைக் கழிப்பாள்.அதோ.....நிலா வௌ¢ச்சத்தில் சாலையோரத்தில் நெருங்கி வளர்ந்து நிற்கும் இரட்டை மரத்தில் சாய்ந்திருப்பது யார்....?"அழகம்மா....அழகம்மா...."---பதிலில்லை. கிழவி மரத்தினருகே ஓடினாள். அழகம்மாளேதான்' கன்னிமேரித்தாய் போல, தெய்வீக அழகாய் நின்றிருந்தாள் அழகம்மாள். ஆரோக்கியம் வந்ததைக்கூடக் கவனிக்காமல் சந்திரனில் என்னத்தைத் தேடுகிறாள்' அவள் முகத்தில் புன்னகையும் நிலவும் பொங்கி வழிகின்றன. "அழகம்மா...." கிழவி அவள் காதருகே குனிந்து மெல்ல அழைத்தாள். "ஆயா...." நிலவில் பதிந்த பார்வை பெயராமல் குரல் மட்டும் வந்தது; கிழவிக்கு உயிரும் வந்தது. 'தெய்வமே, அவளுக்கு புத்தி பேதலித்து விடவில்லை....' கிழவி தன் உடலில் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள்."ஆயா" இப்பொழுதும் பார்வை நிலவில்தான் இருந்தது. "என்னாடி கண்ணே....""அதோ நெலாவிலே பாரு...." கிழவியின் வரி விழுந்த முகத்தில் இடுங்கிக் கிடந்த ஔ¢யிழந்த விழிகள் நிலவை வெறித்து விழித்தன. "அதோ நெலாவிலே பாரு... நான் தெனம் ஒன்னைக் கேப்பேனே, 'தேவன் வருவாரா'ன்னு...."--- கிழவிக்குத் தினசரி தன்னிடம் அவள் கேட்கும் அந்த கேள்வி ஞாபகத்துக்கு வந்தது. பல மணி நேரம் மௌனமாய் இருந்து விட்டுத் திடீரென அவள் கேட்பாள்--- "ஆயா, தேவன் மறுபடியும் வருவாரா...." அதற்கு கிழவி பதில் சொல்வாள்; "வருவார் மகளே, வருவார்.... பெரியவங்க அப்படித்தான் சொல்லி இருக்காங்க..." என்று. "சரி; அதற்கு இப்பொழுது என்ன வந்தது?..."அவள் முகம் புன்னகையில் மலரக் கண்கள் ஜொலிக்கப் பேசிக்கொண்டேயிருந்தாள். "அதோ நெலாவிலே பாரேன்....அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்....ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்---அவரைப் பார்த்துச் சிரிச்சேன்.... நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது.... அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு'.... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு... அதைப் பார்க்கும் போது கண்ணும் நெஞ்சும் நெறைஞ்சி எனக்கு மூச்சே நின்று போறமாதிரி இருந்தது...அவரு எனக்குப்பணம் காசெல்லாம் தர்ரேன்னாரு...நான் வேணாம்னு சொல்லிட்டேன். 'ஒனக்கு என்ன வேணும்'னு கேட்டாரு.... 'நீங்கதான் வேணும்'னு சொன்னேன்--- அந்தத்தேவனோட நெழல் என்மேலே விழுந்தது; நிலாவிலேயும் விழுந்தது --- நிலா கறுப்பாயிடுச்சி --- என் ஒடம்பும் இருண்டு போயிடுச்சு. 'நான் கண்ணை மூடிக்கிட்டேன் --- நூறு நூறா,....ஆயிரம், கோடியா மானத்திலே நட்சத்திரமில்லே, அந்த மாதிரி நிலாக் கூட்டம் என் கண்ணுக்குள்ளே சுத்திச் சுத்தி வந்தது. வௌ¢யே ஒலகம் பூராவும் ஒரே இருட்டு. என் உடம்புக்குள்ளே மட்டும் வௌ¢ச்சம், வௌ¢ச்சம், ஒரே வௌ¢ச்சம்' வௌ¢யிலேருந்த வௌ¢ச்சமெல்லாம் என் உள்ளே புகுந்துக்கிட்டுது. அந்த வௌ¢ச்சம் கொஞ்சம் கொஞ்சமா ஒடம்பு பூரா பரவிக் கிட்டிருந்தது. அப்புறம் லேசாக் கண்ணைத் தெறந்து பாத்தா, நெலாவும் இல்லே, தேவனும் இல்லே; இருட்டும் இல்லே, சூரியன் பொறப்படற நேரம்; ஆகாசம் பூரா ஒரே செவப்பு நெறம். நெருப்பு மாதிரி இருந்தது. கண்ணெல்லாம் எரிச்சல், அப்பத்தான் நான் இருந்த நெலையைப் பார்த்தப்ப எனக்கு வெக்கமா இருந்தது.... அந்தத் தூங்கு மூஞ்சி மரத்திலேருந்து ரெண்டு மூணு பூவு, முண்டக் கட்டையா கெடந்த என் உடம்பிலே உதுந்து கெடந்தது, எனக்கு 'ஓ'ன்னு அழணும் போல இருந்தது. அப்ப யாரோ ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா வந்தது....என்னைப் பாத்து 'நீ யாரு'ன்னு கேட்டுது... அது என்னா கேள்வி?.... 'நான்தான் அழகம்மா'ன்னு சொன்னேன். 'ஒனக்கு அப்பா அம்மா இல்லியா'ன்னு கேட்டுது, அந்தக் கேள்வியை யாரும் என்னைக் கேக்கக் கூடாது, தெரியுமா? கேட்டா கொன்னுப் போடலாம் போல ஒரு கோவம் வரும் எனக்கு, ஆமாம்; அப்படித்தான்... அந்தப் பொண்ணு பயந்து போயி ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. அதுக்கு அப்புறம் நீ வந்தே, ஆயா.... ஆயா, அந்தத் தேவன் இன்னொரு தடவை வருவாரா?....."கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை' 'கிறுக்குக் குட்டி என்னமோ உளறி வழியுது' என்று நினைத்துக்கொண்டு "சரி சரி, வா நேரமாச்சு, போவலாம்... இந்த மாதிரி நேரத்தில் நீ தனியா இங்கெல்லாம் வரக்கூடாது, வாடி கண்ணு போவலாம்..." என்று கையைப் பிடித்திழுத்தாள். அழகம்மாள் அப்பொழுதுதான் சுயநினைவு பெற்றாள்--"ஆயா" என்று உதடுகள் துடிக்க, பரக்கப் பரக்க விழித்து உறக்கம் கலைந்தவள் போன்று கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டாள் அழகம்மாள். "ஆயா....என்னெ நீ ரொம்ப நாழி தேடினியா? என்னமோ ஒரே மயக்கமா இருந்துது---இங்கேயே உக்காந்துட்டேன்....நேரம் ரொம்ப ஆவுது இல்லே....இந்தா பணம்...." என்று தனது உழைப்பால் கிடைத்த கூலியை முந்தானை முடிச்சிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தாள் அழகம்மாள். கிழவி, அழகம்மாளின் நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்த்தாள், 'ஒடம்புக்கு ஒண்ணுமில்லே.... பசி மயக்கமா இருக்கும்.'"காத்தாலே பழையது சாப்பிட்டதுதானே....வா வூட்டுக்குப் போயி சோறு திங்கலாம்."வீட்டுக்கு வந்ததும், அடுப்பில் போட்டுவிட்டுப் போயிருந்த ஒரு பானை வெந்நீரை ஊற்றி அழகம்மாளை 'மேல் கழுவ' வைத்து, வேறு உடை கொடுத்து தட்டத்துக்கு முன் உட்கார வைத்துச் சோறு பரிமாறினாள் கிழவி. அழகம்மாள் எங்கோ கூரை முகட்டைப் பார்த்தபடி தட்டிலிருக்கும் சோற்றில் விரலால் கோலம் போட்டவாறு குந்தி இருந்தாள். "என்னாடி பொண்ணே.....சோறு திங்காம குந்தி இருக்கியே?" என்றாள் கிழவி. "ஆயா, என் தேவன் வருவாரா?....""வருவாரம்மா, நீ சாப்பிடு....""எனக்குச் சோறு வாணாம் ஆயா....""நாள் பூராவும் எலும்பை ஒடிச்சிப் பாடுபட்டுட்டு வாரியே.... ஒருவேளைகூட நல்லா சாப்பிடல்லேன்னா இந்த ஒடம்பு என்னாத்துக்கு ஆவும்..... எங் கண்ணுல்லே, சாப்பிடு" என்று அழகம்மாளின் முகவாயைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் கிழவி. கிழவியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் அழகம்மாள் ஒரு புன்முறுவல். "சரி, சாப்பிடறேன் ஆயா....கொஞ்சம் தண்ணி குடு....."இரண்டு கவளம் சாப்பிட்டாள். மூன்றாவது வாய்க்கு ஒரு குவளை தண்ணீரையும் குடித்தாள். அடுத்த கவளம் வாயருகே வரும்போது குடலை முறுக்கிற்று....அழகம்மாள் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு எழுந்து குடிசைக்கு வௌ¢யே ஓடிவந்தாள். ஓடி வந்து குனிந்து நின்று 'ஓ' வென்ற ஓங்கரிப்புடன் வாந்தியெடுத்தாள். அடுத்த நாள் அழகம்மாள் வேலைக்குப் போகவில்லை; சாப்பிடவுமில்லை. மயங்கிக் கிடந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒருவாறு எழுந்து நடமாடினாள்; வேலைக்குப் போனாள். அழகம்மாளுடன் வேலை செய்யும் பெண்கள் தனியே என்னவோ கூடிப் பேசுகிறார்களே, அது என்ன பேச்சு?....இவளைக் கண்டவுடன் பேச்சு நின்றுவிடுகிறதே, ஏன் அப்படி?.....அழகம்மாளுக்கு புரியாத முறையில் குறும்பாகச் சிரித்துக் கொண்டு என்னென்னவோ கேட்கிறார்களே, அதெல்லாம் என்ன கேள்விகள்?.....இவளால் முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லையே, ஏன் அப்படி?....இப்பொழுதெல்லாம் அழகம்மாள் வரும் வரை அவளுக்காகக் காத்திராமல் எல்லோரும் வந்துவிடுகிறார்கள். அவள் மட்டும் கடைசியில் தனியாக வருகிறாள். அழகம்மாளுக்கும் கொஞ்ச நாளாய், இருந்த வாயும் அடைத்துப் போயிற்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை. வேலை செய்யும்போதும், சும்மாயிருக்கும்போதும் அவள் மனம் அந்த ஒரே வார்த்தையை ஜெபித்துக்கொண்டிருக்கும் ---- 'என் தேவன் வருவாரா? என் தேவன் வருவாரா?'அன்று இரவு வழக்கம்போல் ஆரோக்கியத்திடம் கேட்டாள் அழகம்மாள்: "ஆயா, தேவன் வருவாரா?""போடி, புத்தி கெட்டவளே' தேவனாம் தேவன்' அவன் நாசமாப் போக' எந்தப் பாவி பயலோ ஒண்ணுந் தெரியாத பொண்ணைக் கெடுத்துட்டுப் போயிருக்கான். மானம் போவுதுடி பொண்ணே, மானம் போவுது" என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் கிழவி. கிழவி கோபமாகப் பேசியதைத் தாள முடியாமல், அழகம்மாள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். விம்மி விம்மி, கதறிக் கதறிக் குழந்தைப் போல் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் கிழவியும் அழுதாள். கிழவியின் நினைவில் பத்து வருஷத்துக்குமுன் யாருடனோ, எங்கோ ஓடிப் போன இஸபெல்லா நின்றாள். "மகளே....இஸபெல்' நீயும் இப்படித்தான் ஏதாவது கெட்ட பேருக்கு ஆளாகி என் மொகத்திலே முழிக்க வெக்கப்பட்டுக்கிட்டு ஓடிப் போனியா?...ஐயோ'.... இவளும் அந்த மாதிரி ஓடிப்போவாளோ?'----கிழவிக்கு மார்பில் பாசம் பெருகி வந்து அடைத்தது. 'என் இஸபெல் எங்கேயும் ஓடிப் போகல்லே...இதோ இருக்காளே...இதோ, இங்கேயே இருக்கா,--- கிழவியின் பார்வை அழகம்மாளின் மேல் கவிந்திருந்தது. "மகளே...." என்று அழகம்மாளை அணைத்துக் தேற்றினாள்'"வருத்தப்படாதே அழகம்மா...எந்திரிச்சி வந்து சாப்பிடு...""போ'.... நீதான்... நீதான் என் தேவனை நாசமாப் போகன்னு திட்டினியே.... நா, சாப்பிடமாட்டேன்... ஊம்ஊம்" என்று குழந்தைபோல் கேவிக் கேவி அழுது கொண்டே சொன்னாள் அழகம்மாள்.தெரியாத் தனமாய் திட்டிட்டேன்டி கண்ணே.....வா, எந்திரிச்சி வந்து சாப்பிடு... இனிமே உன் தேவனைத் திட்டவே மாட்டேன்."அழகம்மா அழுது சிவந்த கண்களால் கிழவியைப் பார்த்தாள். கண்ணீருடன் புன்முறுவல் காட்டி "சோறு தின்னும்மா," என்று கெஞ்சினாள் கிழவி. "சொல்லு ஆயா.... தேவன் வருவாரா?""வருவான்""போ ஆயா, 'வருவான்'னு சொல்றியே?""இல்லேயில்லே, வருவாரு' ""ஆயா எம்மேலே கோவமா?""இல்லேடி தங்கம்....நீ சாப்பிடு....""கொஞ்சம் ஊறுகாய் வெச்சாத்தான்.....""வெக்கிறேன், உனக்கு இல்லாததா?""ஆயா.....""மகளே....""ஆ.....யா....""மகளே...."----இருவர் கண்களிலும் கண்ணீர் வழிய ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக்கொண்டு....அ தெ ன் ன ? அழுகையா?..... சிரிப்பா?....அழகம்மாளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அந்த மகிழ்ச்சி அல்லது துயரம் அழகம்மாளுக்கு இருந்ததோ என்னவோ, ஆரோக்கியத்திற்கு முதலில் இரண்டும் இருந்தது. பிறகு தனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் ஆனந்தம் ஏற்பட்டு, அந்த ஆனந்தத்திலேயே அவள் இப்பொழுது திளைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை'ஆமாம்: இஸபெல்லுக்குப் பிறகு அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் சில மாதங்களில் ஒரு குழந்தை தவழப் போகிறதே'கொஞ்ச நாளாய் அழகம்மாள் வேலைக்குப் போவதில்லை. எப்பாடு பட்டோ கிழவி அவளுக்கு மூன்று வேளையும் வயிறாரச் சோறு போடுகிறாள். தனக்கு ஒரு வேளைக்கு இல்லாவிட்டாலும் சகித்துக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகக் காப்பாற்றுகிறாள் கிழவி."என் மகள் ஒரு கொறையுமில்லாமல் பெற்றுப் பிழைக்க வேண்டு" மென்று நாள்தோறும் கர்த்தரை ஜெபிக்கிறாள்.அழகம்மாளைக் கூட்டிக்கொண்டு போய் தினசரி சர்க்கார் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள். சேரியிலுள்ளவர்கள் அழகம்மாளோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பைத்தியம் என்கின்றனர். அதைப்பற்றிக் கிழவிக்கென்ன கவலை?கிறிஸ்மஸ்உக்கு இரண்டு நாட்களுக்குமுன் அழகம்மாளைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு தனியே வந்தாள் கிழவி. அழகம்மாளோ ஆஸ்பத்திரி பெஞ்சின் மீது எங்கோ வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நாளாகவே அவள் நிலை அப்படித்தான் இருந்தது.கிறிஸ்மஸ்உக்குள் குழந்தை பிறந்துவிடும்... குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை தைக்கணும்" என்று நினைத்த கிழவிக்கு ஆனந்த மேலீட்டால் உடல் பதறிற்று. கர்த்தரை ஜெபிக்கும் உதடுகள் துடித்தன. உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொள்ளும்போது விரல்கள் நடுங்கின. மாலை மணி நாலுக்கு, பிரசவ வார்டில் பேச்சும் கலகலப்புமாக இருந்த நேரத்தில்--பக்கத்தில் இருந்த குழந்தை 'வீல் வீல்' என்று அலறும் சப்தத்தில் கண் விழித்தாள் அழகம்மாள்.ஆமாம்: விடியற்காலை நேரத்தில், கிறிஸ்மஸ் தினத்தன்று அவளுக்குக் குழந்தை பிறந்திருந்தது: ஆண் குழந்தை' கழுத்தில் கிடக்கும் ரோஜா மாலை சரிந்து கிடப்பது போல் அந்தப் பச்சைச்சிசு அழகம்மாளின் மார்போடு ஒட்டிக் கிடந்தது. அழகம்மாளின் பார்வை ஒரு வினாடி குழந்தையை வெறித்துச் சுற்றும் முற்றும் பரக்கப் பரக்க விழித்துச் சுழன்றது. "ஏது இந்தக் குழந்தை' '"ஏ பொம்பளே...புள்ளை கத்துது பேசாம பாத்துக்கினு இருக்கியே...பால் குடு" என்று அதட்டினாள் ஒரு கிழவி. 'இது என் குழந்தையா? எனக்கேது குழந்தை?'--அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தை வீரிட்டது'"ஆமாம்; இது என் குழந்தைதான்...என் மகன் தான்." குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துத் துணியால் மூடிக் கொண்டாள்."பையனைப் பாரு, அப்பிடியே அப்பனை உரிச்சிக்கிட்டு வந்திருக்கான்" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அழகம்மாள். அடுத்த கட்டிலினருகே ஒரு கிழவியும் இளைஞனும் நின்றிருந்தனர். 'அந்தக் குழந்தைக்கு அவன் அப்பனாம்; என் குழந்தைக்கு?''ஒவ்வொரு கட்டிலினருகிலும் ஒவ்வொரு அப்பன், தன் குழந்தையைப் பார்க்க வந்து நின்றிருக்கிறானே...என் குழந்தையைப் பார்க்க அவன் அப்பன் ஏன் வரவில்லை' என் மகனுக்கு அப்பன் எங்கே? அவன் எப்பொழுது வருவான்?' கண்ணில்படும் ஒவ்வொரு மனிதனையும் உற்று உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவள். குழந்தை மீண்டு அழுதது. "ஏண்டா அழறே? உன்னைப் பார்க்க உன் அப்பா வரலேன்னு அழறியா? இரு இரு; நான் போயி உன் அப்பாவைக் கூட்டியாறேன்" என்று குழந்தையை எடுத்துப் படுக்கையில் கிடத்தினாள் அழகம்மாள்.கிறிஸ்மஸ்உக்காகக் குழந்தைக்குச் சட்டை தைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆரோக்கியத்திற்குத் தலையில் இடி விழந்தது போலிருந்தது. --கட்டிலின் மீது குழந்தை கிடக்கிறது. அழகம்மாளைக் காணோம். எல்லோரும் தேடுகிறார்கள்.கிழவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அப்பொழுது திடீரென அவளுக்கு முன்பொரு நாள் அழகம்மாள் காணாமற் போய்க் கண்டுபிடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து மாதாகோயில் சாலையிலிருக்கும் அந்த இரட்டை மரத்தை நினைத்துக்கொண்டு ஓடினாள். ஆனால்... ஆஸ்பத்திரியை விட்டு வௌ¢யே வந்ததும் அதற்குமேல் நகர முடியாமல் திகைத்து நின்றாள் கிழவி. எதிரிலிருக்கும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் அழகம்மாளைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் விளைந்த திகைப்பா?பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருக்கும் அந்த மனிதரிடம் அழகம்மாள் என்ன பேசிக்கொண்டிருக்கிறாள்?"சீ சீ, போ" என்று விரட்டுகிறாரே அந்த மனிதர். பிச்சையா கேட்கிறாள்? என்ன பிச்சை? கிழவி மகளை நெருங்கி ஓடினாள். அதற்குள் அழகம்மாள் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்னொரு இளைஞனை நெருங்கி என்னவோ கேட்டாள். அவள் குரல் இப்பொழுது கிழவியின் செவிகளுக்குத் தௌ¢வாகக் கேட்டது. "என்னாங்க...என்னாங்க....உங்க மகனைப் பார்க்க நீங்க ஏன் வரலை?.... அப்பாவைப் பார்க்காம அவன் அழுவுறானே.... வாங்க; நம்ப மகனைப் பாக்க வாங்க...." என்று அந்த வாலிபனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள். அவன் பயந்து போய் விழிக்கிறான். "மகளே...." என்று ஓடி வந்தாள் கிழவி. திரும்பி பார்த்த அழகம்மாள் கிழவியை அடையாளம் கண்டு கொள்ளாமல் விழித்தாள். "என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா?" அந்த ஒரே கேள்விதான்'"நீ வாடி கண்ணே என்னோட....இதோ பாத்தியா, உன் மகனுக்குப் புதுச்சட்டை" என்று மடியில் வைத்திருந்த சட்டையை எடுத்துக் காண்பித்தாள் கிழவி. அழகம்மாள் ஒரு வினாடி சட்டையை உற்றுப் பார்த்தாள்' "நல்லா இருக்கு; பையனுக்குப் போட்டுப் பார்ப்பமா?" என்றாள் புன்னகையுடன். அடுத்த நிமிஷம் அவள் முகம் வாடிக் கறுத்தது. "போ, என் மகனுக்குச் சட்டை வேணாம்; அப்பாதான் வேணும்" என்று சிணுங்கினாள்."மகளே' உனக்குத் தெரியலியா? முன்னே எல்லாம் நீ சொல்லுவியே 'தேவன்'னு....அந்த தேவன்தான் இப்ப வந்து உன் வயித்திலே மகனாப் பிறந்திருக்கான்.... ஆமாண்டி கண்ணே' இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா... கர்த்தருக்குக் கூட அப்பா கிடையாது.... நீ கவலைப்படாதே மகளே' "கிழவியின் வார்த்தைகள் அழகம்மாளுக்கு ஆறுதல் அளித்திருக்குமா? அவள் பார்வை.... அழகம்மாளின் பார்வை, உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - யுக சந்தி

யுக சந்தி
கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்."பாட்டி...பாட்டி' பையைத் தூக்கியாரட்டா? ஓரணா குடு பாட்டி.""வண்டி வேணுங்களா அம்மா?""புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம்" ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:"எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி. பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்?...அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி. வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம். அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி. எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன."என்னப்பனே மகாதேவா" என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வௌ¢த் தெரிந்தது. ---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது..... பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன்."பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா?" என்று அன்புடன் விசாரித்தான். "யாரு வேலாயுதமா?....ஆமா' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?" என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி. "ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான்.""நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்....' இது மூணாவது பையனா?""ஆமாமுங்க" என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம் "நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?" என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான். "அட அசடே, என்ன சிரிக்கிறாய்? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான் சொல்றது?" என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான். "இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ" என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள். "பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்.... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்" என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ---தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான். சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கௌரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை. எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி--- கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்---அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.

கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள். பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை--- அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை' தான். விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கௌரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை. ---பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார். "அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு...." என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான். இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும். இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை. ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா. -- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி' என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள். "கதவெத் தெறடி" என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், "அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா'..." என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா. கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் "ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே' " என்று குழந்தையை வைதுவிட்டு "வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ? " என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி."இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்..." என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் "நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி'... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு" என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்."பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்..." என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தௌ¢த்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து "என்னப்பனே... மகாதேவா" என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா. "பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு..." என்று விசிறிக்கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர். "இருக்கட்டும்டா....கொழந்தை' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி. 'இப்ப என்ன பண்ணுவியாம்' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா. ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது. "ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா" என்று கவரை நீட்டினாள் பாட்டி. இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன்" என்றார் கணேசய்யர். "ஓ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது?... பேரைப் பார்த்தேன்..." என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ..." என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, "கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்" என விளக்கினாள் பாட்டி. கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப்'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்.... தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை. 'என்ன விபரீதம்' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வௌ¢ச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும்' "என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு.... இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌ¢ந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன். என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...என் காரியம் என் வரைக்கும் சரியானதே'நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌ¢ச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள்.ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?உங்கள் மீது என்றும்மாறாத அன்பு கொண்டுள்ளகீதா""என்னடா.. இப்படி ஆயிடுத்தே?" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி. "அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான்" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.பாட்டி திகைத்தாள்'--தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மாப் பிள்ளை' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை."அப்படியாடா சொல்றே?" என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி. "வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ...' " என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.'நான் பிறந்த யுகமே வேறேடா' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கௌரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்...' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மௌனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி "அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி' " என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்...."ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம்' செய்து விட்டார்கள்?' --பாட்டிக்குச் 'சுருக்' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்....இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும்?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்'... --அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா?ஆனால்...கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ' என்ன இப்படி ஆய்விட்டதே'... என்ன இப்படியாய் விட்டதே' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,"பாட்டிடீ..." என்று ரகசியமாக எச்சரித்தான்.'எங்கே? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா?' என்று பின் வாங்கி நின்றாள் மீனா."சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா..." என்றான் அம்பி.மீனா தோள் வழியே 'ஸ்டைலாக' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். "பாட்டி வெள்ளிரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே..." என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை."எப்ப வந்தேள் பாட்டி?" என்ரு கேட்டுவிட்டு "என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன?" என்று சைகையால் கேட்டாள் மீனா.பாட்டியின் கண்கள் குளமாயின.மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு.அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்."அதை நீ படிக்க வேண்டாம்' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது."அடி நாசமாப் போக" என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.இரவு முழுதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி'--'என்னடி இப்படி பண்ணிட்டியே' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது. தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம். கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி "அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு..." என்றார். "வாயை மூடுடா..." என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?..." என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள். "என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு,' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை."என்ன தப்பா?...... என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா?" என்று கத்தினார் கணேசய்யர்.அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை. பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: "ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம்? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படீர்' னு தௌ¢ஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு...""அதனாலே சரியாகிடுமா அவ காரியம்?" என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்."அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே?" என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி. "சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன்" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்."நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள். "ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள். "அம்மா' ஆ...." என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்."அசடே....எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா" என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். "பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ..." என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி. "எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும்" என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி. "நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு" என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள். 'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது' நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா?' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று "நான் போயிட்டு வரேன்" என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள். அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?......ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை'

வெள்ளி, டிசம்பர் 12, 2008

கேரக்டர் : கமிஷன் குப்பண்ணா


கேரக்டர் : கமிஷன் குப்பண்ணா


குப்பண்ணாவைத் தேடிக் கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக்கொண்டிருப் பான்.
''என்ன ஸார் பண்றது? சப் ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம்; வக்கீல் வீட்டுப் பையனுக்கு காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணாதான்! முடியாதுன்னா யார் விடறா?'' என்பான்.
''குப்பண்ணா! உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்று ஓடி வருவார் ஓர் ஆசாமி.
''ரிஸ்ட் வாச் விஷயம்தானே? வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்'' என்று அவரை அழைத்துச் சென்று, ''கடியாரத் தைக் காட்டுங்க, பார்க்கலாம். எத்தனை ஜ்வல்ஸ்? பழசு மாதிரி இருக்கே?'' என்பான்.
''என்ன, குப்பண்ணா! புது வாச் இது! பார்த்தா தெரியல்லே? சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசம்தான் வாங்கினேன். 320 ரூபாய்'' என்பார் அவர்.
''அடாடா! ஏமாந்துட்டேளே சார்! என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்று முப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப் பேனே! சரி, போறது. இப்ப யார் சார் வாங்கப்போறா? இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல் லுங்க. ஒரு இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்'' என்று கடியாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடி வருவார்.
''என்ன குப்பண்ணா? உன்னை எங்கெல்லாம் தேடறது? சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?'' என்பார். அவ்வளவுதான்... ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் போய்விடுவான்.
''உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே! நாளோ ஓடிண்டிருக்கு. 'கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்; கச்சே ரிக்கு ஏற்பாடு பண்றேன்; பந்தல் காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு. நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னியே?''
''இப்பவும் சொல்றேன், நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. இதோ, இப்பவே போய் சத்தி ரத்தை 'ஃபிக்ஸ்' பண்ணிட்டு, கையோட கச்சேரிக்கும் ஏற்பாடு பண்ணிடறேன். பால்காரன், சமை யல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா? இன்னொரு விஷயம்... மாப்பிள்ளைக்கு ரிஸ்ட் வாச் போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே... ஒரு இடத்திலே ஃபஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. விலை ரொம்ப மலிவு. அவன் 300 ரூபா சொல்றான். வேணுமானா சொல்லுங்க, 250-க்கு முடிச்சுடலாம். முந்திக் காட்டாப் போயிடும்'' என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை அவர் தலையில் கட்டிவிடுவான். வாச்சின் சொந்தக்காரரிடம் 200-க்குதான் விலை போயிற்று என்று சொல்லி, 50 ரூபாய் கமிஷன் பார்த்துவிடுவான்.
''என்ன குப்பண்ணா, எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காய் மிஞ்சிப் போயிடுத்தே! அதை வித்துக் கொடுன்னு சொல்லியிருந்தேனே... மறந்துட்டியா!''
''வக்கீல் வீட்டுக் கல்யாணத் துக்கு வேண்டியிருக்கு. பெரிய காயா இருக்கணும்னு சொன்னா. அதான் யோசிக்கிறேன். எதுக்கும் விலையைச் சொல்லுங்க.''
''நூறு 15 ரூபாய்னு போட்டுண்டு தள்ளிவிடுடா. உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்.''
''கமிஷனா? சேச்சே! உங்ககிட்டே அதெல்லாம் வாங்குவேனா? அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு கமிஷனும் கிமிஷனும்?''
ஆனால், வக்கீல் வீட்டில் நூறு 20 என்று விலை சொல்லி, ஆயிரம் காயையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் 14 ரூபாய் என்று சொல்லி அதிலும் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான் கமிஷன் குப்பண்ணா
நன்றி : விகடன் பொக்கிஷம் (15.05.1960)

புதன், டிசம்பர் 10, 2008

தமிழ்நாடு துக்கத்தில் ஆழ்ந்தது.... (ஆற்காடு காரணமில்லை)

பிரிந்திருந்த உறவுகள் மனம் மாறிச் சேர்ந்துவிட்ட மகிழ்ச்சி முதல்வர் கருணாநிதியின் குடும்பத் தில் தெரிந்தாலும்... சங்கம விழாவை அடுத்து ஏற்பட்ட சங்கடங்களும் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஒட்டுமொத்தக் குடும்ப சந்திப்புக்கு அழைப்பில்லாமல் புறக்கணிக்கப்பட்ட முதல்வரின் மூத்த மகனான மு.க.முத்துவின் குடும்பம் வருத்தத்தில் இருப்பது பற்றி கடந்த இதழிலேயே கழுகார் சொல்லியிருந்தார். இப்போதோ... மு.க.முத்துவின் மகனும் முதல்வரின் தலைப் பேரனுமான டாக்டர் அறிவுநிதி மொத்த உறவுகளோடும் பேச்சுவார்த்தைகளையே துண்டித்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டதாகவும்... மனவருத்தம் தாங்காமல் முதல்வரின் மகன் மு.க.முத்து சென்னையில் உள்ள தன் வீட்டிலிருந்து கிளம்பி திருவாரூருக்குப் போய் மனக் கொதிப்பை ஆற்றிக் கொள்ள முயல்வ தாகவும் தகவல்கள் வந்தபடி இருக்கின்றன.

--- ரொம்ப தேவை---------
பச்சையம்மா சூடான அறிக்கை...

இழப்பிட்டு தொகை எப்படி உண்டியல் குலுக்கியா?............



5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு



கருத்து கந்தசமி அறிக்கை



யப்பா இந்த அரசியல் நாக்கு இருக்கே நம்பள விட நல்ல காமடி பண்ணுதுங்கோ....

பாப்போம் பச்சையம்மாவின் பதில் என்னன்னு....


என்சாய்..............

திங்கள், டிசம்பர் 08, 2008

Shame the Corrupt with Rs. Zero !

ஞாயிறு, டிசம்பர் 07, 2008

உலக நாடுகளை மொட்டை போட கத்துக் கொடுக்க ஏதாவது கோர்ஸ் இருக்கா?

நன்றி : குமுதம்

வெள்ளி, டிசம்பர் 05, 2008


கேரக்டர் 'அவுட்' அண்ணாஜி


நேர் வகிடு, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் - இவை யாவும் 'அவுட்' அண்ணா ஜிக்கே உரிய அம்சங்கள்.
முன்பின் தெரியாதவர்களிடத் திலே கூட ரொம்ப நாள் பழகிய வனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான். புருடாக்களும் கப்சாக் களுமாய் உதிர்த்துத் தள்ளிவிடு வான். தன்னுடைய பொய்களைக் கேட்பவர்கள் நம்புவார்களா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை.
''நேற்றுதான் டில்லியிலிருந்து திரும்பி வந்தேன். போன இடத்தில் ஒரு வாரம் 'டிலே' ஆகிவிட்டது. இப்போதுதான் ப்ளேனில் மீனம்பாக்கம் வந்து இறங்கினேன். டாம் அண்டு டிக் கம்பெனி புரொப்ரைட்டரும் என்னோடு தான் விமானத்தில் வந்தார். அவர் காரிலேயே என்னையும் அழைத்து வந்துவிட்டார்'' என்று தன்னுடைய பிரதாபங்களை அவிழ்த்துவிடுவான்.
''டில்லியில் ஏன் டிலே?'' என்று நாம் அவனை கேட்க வேண்டிய தில்லை. அவனாகவே சொல் வான்.... ''டிஃபன்ஸ் மினிஸ்டர் வி.கே.மேனன் என் கிளாஸ்மேட் டாச்சே! தற்செயலா என்னைப் பார்த்துட்டார். 'ஹல்லோ அண்ணாஜி! எங்கே கவனிக்காமல் போறே? வா வீட்டுக்கு!' என்றார். அவரோ ஓல்ட் ஃப்ரண்ட்; டிஃபன்ஸ் மினிஸ்டர் வேற! எப்படித் தட்டறது? சரின்னு அவரோடு போக வேண்டியதாப் போச்சு! டீ கொடுத்தார். எனக்கு டீ பிடிக்காது. ஆனாலும், என்ன செய்யறது! குடிச்சு வெச்சேன்.
''வந்தது வந்தே... என்னோடு கெய்ரோவுக்கு வறயா, நாசரைப் பார்த்துட்டு வரலாம்னார். எனக் கும் நாசர் கிட்டே கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு புறப் பட்டுட்டேன்.''
''நாசர் கிட்டே உனக்கென்ன வேலை?''
''ஒரு பிஸினஸ் விஷயமாதான்! நாசரிடம் அஸ்வான், 'டாம் கான்ட்ராக்ட்' கேட்டிருந்தேன். 'சூயஸ் தகராறு தீரட்டும்; அப்புறம் சொல்றேன்'னு சொல்லியிருந்தாரு. கெய்ரோவுக்குப் போய்விட்டு இண்டியாவுக்குத் திரும்பினேன். பாம்பேயில் இறங்கி டெஸ்ட் மாட்சைப் பார்த்துட்டு கார் ஏறப் போறேன்... கிரிக்கெட் பிளேயர் கண்டிராக்டர் இல்லே கண்டிராக்டர், அவன் என்னைப் பார்த்துட்டான். 'செஞ்சுரி போட்டேனே, பார்த்தயா அண்ணாஜி?'ன் னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். 'பிளேன்லே ஏதோ அகாமடேஷன் தகராறு. கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா?'ன்னான். சரின்னு ஏர் இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என்குயரி கர்ள் மிஸ்.கல்பனா தன்னோட ஸ்வீட் வாய்ஸ்லே 'என்ன வேணும்?'னா. 'அண்ணாஜி'ன்னேன். அவ்வளவுதான்... 'ஹல்லோ! அண்ணாஜியா? உங்க லெதர் பாக் இங்கே இருக்குது. மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்க. வந்து வாங்கிட்டுப் போங்கோ'ன்னா.
உடனே காரில் புறப்பட்டுப் போய் அந்த சிந்தி கர்ள் கிட்டே பையை வாங்கிண்டேன். என் பிசினஸே அதுலதானே இருக்குது?
''அண்ணாஜி! நீங்க ஒரு 'மொபைல் மல்டிபிளைட் பிஸினஸ் இன்ஸ்டிடி யூஷன்'னு அவ எனக்கு ஒரு அட்சதையைப் போட்டாள். கிறிஸ்மஸ் பிரசன்ட்டுக்குதான் அடிபோடறாங்கறது எனக்குப் புரியாதா? சாக்லெட் டின்னை வாங்கிப் போட்டுட்டு, கண்டிராக்ட ருக்கும் ஒரு ஸீட் புக் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.''
அண்ணாஜி இப்படி அளந்து கொண்டேயிருப்பான். பம்பாய், கல்கத்தா, டில்லி, லண்டன், சௌத் ஆப்பிரிக்கா என எல்லா இடங்களிலும் தனக்கு பிஸினஸ் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் எல்லாரையும் தெரியும் என்றும் சொல்வான்.
எல்லாம் ஒரே ஹம்பக்!
நன்றி : விகடன் பொக்கிஷம் (24.1.1960)

வியாழன், டிசம்பர் 04, 2008


கேரக்டர்: அக்கப்போர் சொக்கப்பன்


''சார், சார்!'' என்று கையைத் தட்டி, குடியே முழுகி விட்டதைப் போல் அவசரமாக யாரையோ கூப்பிடுகிறானே, அவன்தான் அக்கப்போர் சொக்கப்பன்.
காலம், இடம், மனிதர்களின் தராதரம் எதுவும் அவனுக்கு அக்கறை கிடையாது. யாராய் இருந்தாலும், எந்த இடமாய் இருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு பயங்கரமாக நாலு சங்கதிகளையாவது சொல்லாவிட்டால் அவனுக்கு மண்டையே வெடித்துவிடும்.
''சார், உங்களுக்கு விஷயமே தெரியாதா? ராயப்பேட்டைல அரசியல் கட்சிங்க ரெண்டு, ஊர்வலமா போனதுல ரெண்டுக் கும் மோதல் ஏற்பட்டு, பெரிய ரகளை! ஒரே கல் வீச்சு! இதுவரைக் கும் முன்னூறு பேருக்கு மேலே பலத்த அடி. நாலு பேர் மண்டை உடைஞ்சு செத்துட்டாங்க. அடி பட்டவங்களுக்கு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே இடம் போதாம, ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வேற தூக்கிட்டுப் போறாங்க சார்!'' என்பான்.
ராயப்பேட்டைப் பக்கம் போய்ப் பார்த்தால், அங்கே இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது தகராறு நடந்திருக்கும். போலீசார் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். அவ்வளவு தான்!
திடீரென்று ஓடிவந்து, ''புழலேரி உடைத்துக்கொண்டுவிட்டது. மவுன்ட்ரோடு பக்கம் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரளியைக் கிளப்பி விடுவான். அந்தச் செய்தி கேட்டு மவுன்ட் ரோடே அல்லோலகல்லோலப் படும். அடுத்தாற்போல் மயிலாப் பூருக்குப் போய், ''வெள்ளத்தில் மவுன்ட்ரோடு பூராவும் முழுகி விட்டது. எல்.ஐ.சி. கட்டடத்தைத் தவிர எல்லாம் போய்விட்டது'' என்பான்.
அங்கிருந்து இன்னொரு இடத் துக்குப் போவான். அங்கே யாராவது குப்பைமேட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டு இருப்பார்கள். அதைப் பார்த்து விட்டு தெரிந்தவர்களிடமெல்லாம் ஓடிப்போய், ''சார்! பழைய மாம் பலத்தில் ஒரு தெருவே தீப்பிடிச்சு எரியுது சார். ஒரு டஜன் ஃபயர் என்ஜின் வந்து தீயை அணைச்சுக் கிட்டிருக்கு. ஆனா, இன்னும் தீ அடங்கினபாடில்லே'' என்பான்.
யாராவது ரோடிலே ஒரு நாலணாவைத் தொலைத்து விட்டிருப்பார். அந்தச் செய்தி சொக்கப்பனின் காதுக்கு எட்டும். அவ்வளவுதான்; சொக்கப்பன் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக் கெல்லாம் போய், ''ஸார்! துரை சாமி இன்னிக்கு நடுரோடிலே நாலாயிரம் ரூபாயைத் தொலைச் சுட்டான் ஸார்!'' என்பான். அதே செய்தியை அடுத்தவரிடம் போய் சொல்லும்போது, 'நாற்பதாயிரம்' என்பான். அதற்கடுத்தவரிடம் போகும்போது, அது நாலு லட்சம் ஆகிவிடும்!
காலைப் பத்திரிகைகளில் வரும் அக்கப்போர்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்து விட்டு, அவற்றுக்குக் காது மூக்கு வைத்து பயங்கரமாகச் சிருஷ்டித்து நாலு பேரிடத்தில் சொல்லாவிட்டால், அவனுக்கு நிம்மதி ஏற்படாது.
''பங்களூர்லே பாங்க் ஒண்ணு குளோஸ் ஆகப் போறதுன்னு ஒரு ஸீக்ரெட் இன்ஃபர்மேஷன் கிடைச்சுது. உடனே போய் அந்த பாங்கிலிருந்த என் பணம் பூரா வையும் வித்ட்ரா பண்ணிண்டு ராத்திரியோடு ராத்திரியா காரிலேயே திரும்பி வந்துட்டேன்'' என்று கரடி விடுவான்.
உலகமே பிரளயத்தில் மூழ்கி விடப்போவதாக போன வருஷம் ஒரு பெரிய வதந்தி அடிபட்டுக் கொண்டிருந்ததல்லவா? அந்த வதந்தியை அத்தனை பயங்கரமாகப் பரப்பியவனே அக்கப்போர் சொக்கப்பனாய்த்தான் இருக்க வேண்டும்!
நன்றி : விகடன் பொக்கிஷம் (12.3.1961)

கேரக்டர் அரசியல் அண்ணாசாமி


காலை பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு, மாலையில் கூடும் அந்த பார்க் மகாநாட்டில் விஷயங்களை அலசிவிட்டுப் போனால் தான், அங்கு கூடும் 'பென்ஷன்'களுக்கெல்லாம் தூக்கமே வரும்.
''அண்ணாசாமி ஸார்! வாங்கோ! நீங்க இல்லாம கான்ஃபரன்ஸே 'டல்' அடிக்கிறது. ஏன் லேட்டு?''
அவர் வந்ததுமே கான்ஃபரன்ஸ் களை கட்டிவிடும்.
அண்ணாசாமி வரும்போதே கடுகடுப்பாகத்தான் வருவார். உலகப் பிரச்னைகளையெல்லாம் எப்படித் தீர்த்து வைப்பது என்ற கவலை அவர் முகத்தில் பிரதி பலிக்கும்.
''திருச்சியிலே பார்த்தீங்களா? குழாய் தண்ணிக்குக் கியூவிலே நிக்கறங்களாம். பக்கத்திலே காவிரி ஓடறது. என்ன பிரயோஜனம்?'' என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான், அண்ணா சாமிக்கு ஆவேசம் பிறந்துவிடும்.
''இதென்ன அக்கிரமம் ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப் போமா? குடிக்கிற தண்ணிக்கு 'க்யூ'வாம்! இந்த அழகிலே காவிரி வாட்டரை மெட்ராஸூக்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்...'' என்பார்.
''கிருஷ்ணா நதியைக் கொண்டு வரப்போறதா ஒரு ஸ்கீம் இருந் துதே, அது என்ன ஆச்சு?''
''ஸ்கீமுக்கு என்னங்காணும் ஆயிரம் ஸ்கீம்! சி.பி-யும் சீனிவாசய் யங்காரும் போடாத ஸ்கீமா? பணத் துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம். கன்னாபின்னானு கடனை வாங்கி தண்ணி இல்லாத இடத்திலெல் லாம் டாம் கட்டிண்டிருக்கான். கேட்டா இன்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்புங்கறான். குருஷேவ் எதுக்குத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன். இன்டர்நேஷனல் ரிலேஷன் ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும், பார்த்துண்டே இரும்! நான் இன்னிக்குச் சொல்றேன்... குருஷேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா!''
''அதிருக்கட்டும்... எவரெஸ்ட் யாருக்குன்னு தீர்மானமாச்சா?''
''பரமசிவனுக்குத்தான், போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னுதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னுதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம விருந்து வெச்சிண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிஃபென்ஸ் வேறே... டிஃபென்ஸ் மினிஸ்டர் வேறே!''
''ரிடயரிங் வயசை அம்பத்தஞ்சி லேருந்து அம்பத்தெட்டா பண்ண முடியல்லே! பென்ஷன் வரியை எடுக்க மாட்டேங்கிறான். என்ன கவர்ன்மென்ட் வேண்டியிருக்கு? கம்யூனிஸ்டு கவர்ன்மென்ட்டே வந்தா தேவலைன்னு தோண்றது!''
''அதான் வந்துண்டிருக்கானே சைனாக்காரன்... மெதுவா பார்டர் கிட்டே வந்துட்டான். சூ-என்-லாய் வாரான் பார்த்தயளா? வர சமயத் தைக் கவனிச்சயளா? அதுலேதான் இருக்கு ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம், பஞ்சசீலம்னு இருக்கிறதையெல் லாம் கோட்டைவிடப்போறோம்! என்னய்யா சோஷலிஸம் வேண்டி யிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம்; சோஷலிஸம் பண்றானாம்!''
''ஸார், இந்த சௌத் ஆப்பிரிக் கன் ப்ரீமியர்...''
''அட சரித்தான், சௌத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயு மாச்சு! அடடே... மார்கெட்லே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக் காம். விலை ஏர்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம், வாரும்..!''


நன்றி : விகடன் பொக்கிஷம் (24.4.1960)

கேரக்டர் 'டவாலி' ரங்கசாமி
வா ஸார்! எங்கே ஸார் ரொம்ப நாளாக் காணோம்? கலெக்டரையா பாக்கணும்? தாராளமாப் போய் பாரு ஸார். முன்னே மாதிரியா இப்பவெல்லாம்? இன்னா இருந்தாலும் அந்தக் காலம்போல வராது ஸார்! எத்தினி கலெக்டருங் களைப் பாத்திருப்பேன்... நெல்சன் துரை, ஸ்டோன் துரை, எமர்சன் துரை, நார்ட்டன் துரை, ஆலிவ் துரை...
எம்டன் குண்டு போட்டான் பாரு ஸார், அப்ப எமர்சன் துரை குதிரை மேலே பரங்கிமலைக்குப் போறான்; நான் தொரை சானி அம்மாளை இட்டுக் கினு பங்களூருக்குப் போறேன். ஏன்? நாய்க்குட்டி புடிச்சாற. தொரைசானி அம்மாளுக்கு எம் மேலே உசிரு ஸார். 'ரங்ஸாம்... ரங் ஸாம்'னு ஓயாம கூப்பிட்டுக் கிட்டேயிருக்கும். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசும். 'ஓல்ட்மேன்'னு எங்கிட்டே ஒரு பிரியம் ஸார் அதுக்கு. அவ்வளவுதான்!
இப்பக் காலம் மாறிப் போச்சு ஸார்! வெள்ளைக் காரன் இருந்தவரைக்கும் தான் ஸார் இந்த டவாலிங்க ளுக்கு ரெஷ்பெக்ட்! இப்ப ஜிப்பா போட்டுக்கிணு 'ஈஜி'யா கலெக்டரா வந்துட றாங்க. கலெக்டரும் ஜிப்பா, குமாஸ்தாவும் ஜிப்பா, பாக்க வரவங் களும் ஜிப்பா... ஆனை, குதிரை எல்லாம் ஒண்ணாயிட்டுதே ஸார்! உடுப்புக்கு ஒரு மரியாதை வாணாம்?
பஞ்சம் வந்தது பார் ஸார், பஞ்சம்... அப்ப ஆலிவ் தொரைதான் கலெக்டர். அவன் ஒரு கெடுபிடி ஆள். பங்கா இழுக் கணும்பான். 'என்னா மேன் பட்டன்ஸூக் குப் பாலிஷ் போடலே?'ம்பான். எடுத்த துக்கெல்லாம் ஆட்பூட் இம்பான்! நான் பயந்துக்கமாட்டேன். 'நீ போடா கொரங்கு மூஞ்சி'னு தமிழ்லே திட்டிப் புடுவேன். அவனுக்கு என்னா ஸார் புரியப்போவுது?
ஒருநாள் சொல்றான் ஸார், இங்கிலீஸ்ல தான்... 'இந்த லெட்டரைக் கொண்டு போய் ஜோன்ஸ் தெரு ரோஸ் கிட்டே குடுத்துட்டு வா'ன்னு! பிரிச்சுப் பாக்க றேன், லவ் லெட்டரு! முடியாதுன்ட்டேன். என் டூட்டி இதுவா ஸார்? இவன் இன்னா செய்யமுடியும் என்னை!
ரோஸ் யார் தெரியுமா... ஆங்கிலோ இண்டியன்ஸ் பொண்ணு சார். இவனுக்கு வயசு பிப்டி ஆவுது. பாவம், அது ஸ்டூடண்ட்ஸ் பொண்ணு ஸார்! இவனுக்கு இன்னா ஸார் அதுங்கிட்டே லவ்வு? கிளியாட்டமா தொரைசானி இருக்கச்சே!
நான் முடியாதுன்னேன் பாரு, அவ்ளோதான், கரம் வச்சிக்கினான். அண்ணிக்கிலேருந்து எம்மேல பாஞ்சுக்கிட்டேயிருந்தான்.
ஒரு நாளு தொரை லேட்டா ஆபீசுக்கு வந்தான். நான் என்னா செஞ்சேன், அவன் மேஜைலேருந்து ஒரு சிகரெட்டை எடுத்து ஊதிக் கினு இருந்தேன். இத்தப் பாத்துக் கினே வந்துட்டான். அவ்ளோ தான்... 'டேய்! உன்னை ஒன் மன்த் ஸஸ்பெண்ட் பண்ணியிருக்கேன்'னான். சரின்னு வூட்டுக்குப் போயிட் டேன். பத்து நாள் கூட ஆவல்லே... தொரை கார்லே வந்து நிக்கறான். பைலு ஏதோ ஆப்படலே. தேடிப் தேடிப் பாத்திருக்கான். இந்த ரங்க சாமி இல்லாமே எந்தத் தொரை குப்பை கொட்ட முடியும்? ஒழிஞ்சு போறான்னு போய் எடுத்துக் குடுத்தேன். 'நோ ஸஸ்பெண்ட்! நாளைலேர்ந்து வேலைக்கு வரலாம்'னான். அப்புறம்தான் ஸார் போனேன்.
இப்ப இன்னா ஸார் டவாலி வேலை! அப்பப் பாக்கணும்... எடுத்ததுக்கெல்லாம் துட்டுதான்! நார்ட்டன் துரை கப்பல் ஏறச்சே எனக்கு ஒரு வெள்ளி சாஸரும் கப்பும் குடுத்துட்டுப் போனான். 'டேய், ரங்ஸாம்! சீமைக்கு எங்கூட வரியா?'னு கூப்ட்டான். இவன் களுக்குத்தான் வேறே வழியில்லே. நாட்டை வுட்டு நாடு வந்தாங்க. நான் போவனா?
முன்னே துரையைப் பார்த் துட்டு வெளியே வரவங்கள்ளாம் அனாவஷ்யமா ஒரு ரூபாயைத் தூக்கி எறிவாங்க ஸார்! இப்ப எல்லாம் போச்சு. ஒரு நாளைக் கெல்லாம் அம்பது பைசா கூடத் தேறல்லே. நீ உள்ளே போய் வா, ஸார்! இப்பத்தான் கண்டவங் கள்ளாம் நுழையறான்களே... அட, நீ போ ஸார்! உன்னைச் சொல்லல்லே!
நன்றி : விகடன் பொக்கிஷம் (28.2.1960)

கேரக்டர் 'ஜம்பம்' சாரதாம்பாள்

''சங்கரா!'' - சாரதாம் பாளின் கம்பீரமான குரல் கேட்டு, சமையல் கட்டிலிருந்த சங்கரன் ஒரு டம்ளர் சாத்துக் குடி ஜூஸூடன் ஓடி வந்தான்.
''இந்த டிரைவர் ஸ்டுடிபேகரை எடுத் துண்டு எங்கடா தொலைஞ்சான்? 'ரோமியோ'வை எங்கே காணோம்... ரெண்டு நாளா அதுக்கு உடம்பே சரியாயில்லையே? மணி எட்டாகப் போகிறதே... சாமளா இன்னும் மாடி யிலே தூங்கிண்டு இருக் காளா? டான்ஸ் வாத்தி யார் வந்து எத்தனை நாழியா காத்திண்டிருப் பார்? அவளுக்கு 'பெட் காபி' கொடுத்து எழுந் திருக்கச் சொல்லுடா! டெலிபோன் மணி அடிக்கிறது பாரு; எடுத்து யாருன்னு கேட் டுட்டுப் போ!''
''வெடர்னரி டாக்டர் வீட்டிலேருந்து டிரைவர்தான் பேசறாம்மா! 'ரோமியோ'வை டாக்டர் கிட்டே காட்டினானாம். அதுக்கு 'த்ரோட்'லே ஏதோ டிரபிளாம். நாலு நாளைக்கு அது 'ரெஸ்ட்' எடுத்துக்கணுமாம். அதிகமா குரைக்கக் கூடாதாம்!'' என்றான் சங்கரன்.
''உடம்பு சரியில்லாம இருக்கிறபோது பாவம், அதை ஏண்டா அழைச்சுண்டு போனான்? போன் பண்ணினா, டாக்டரே இங்கே வந்துட்டுப் போறார். சரி, அவனை சீக்கிரம் வரச்சொல்லு. 'ஷாப்பிங்' போகணும்!''
சாரதாம்பாள் மூச்சுவிடாமல் பேசி விட்டு, சங்கரனிடமிருந்து சாத்துக்குடி ஜூஸை வாங்கி நாசூக்காக அருந்தினாள். பிறகு இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். அப்புறம் சாவகாசமாக ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு, தன் இடது கை வைர வளையல் களை ஒரு தடவை பட்டுப் புடவையின் தலைப்பால் துடைத்துவிட்டுக் கொண்டே, விரல்களிலுள்ள மோதிரங்களைத் திருப்பித் திருப்பி அழகு பார்த்துக் கொண்டாள்.
தான் அந்த வீட்டில் கால் எடுத்து வைத்த பிறகுதான் தன் கணவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டதென்பது அவள் நினைப்பு. அந்தப் பெருமை அவள் பேச்சில் எப்போதும் மிதந்துகொண்டேயிருக்கும் வெளியிலே போனால் தன் 'ஜம்பம்'தான்! யாரைப் பார்த்தாலும் தன் குழந்தைகளின் பிரதாபம்தான். சங்கீதக் கச்சேரிக்குப் போனால், அமெரிக்காவில் இருக்கும் தன் சின்னப் பிள்ளையைப் பற்றிப் பக்கத்தில் இருக்கும் அம்மாளிடம் 'போர்' அடிப்பாள். தன் பெண்ணை மணந்துகொள்ள ஐ.ஏ.எஸ் பையன்கள் 'க்யூ' நிற்பதாக சொல்லுவாள்.
அட்வகேட் கோர்ட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டு இருந்தார். ''நாளைக்கு கல்கத்தா போகணும். டிக்கட் புக் பண்ணியாச்சு. அப்புறம் கேஸ் கீஸ்னு சொல்லா தீங்கோ...''
கல்கத்தாவில் அவள் தங்கை பெண்ணுக்குக் கலியாணம். கலியாணத்தில் எல்லோரும் சாரதாம்பாளையே வந்து வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ''என்ன மாமி! சௌக்கியமா?'' என்று கேட்டவர்களுக்கெல்லாம் ''எனக்கு இந்த கல்கத்தா க்ளை மேட்டே ஒத்துக்கலை. கலியாணம் முடிஞ்சதும் மெட்ராஸூக்குப் பறந்துடுவேன்'' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
''வெயிலே தாங்கமாட்டேங்கறது. போன வருஷம் ஊட்டிக்குப் போயி ருந்தேன். அதுக்கு முன் வருஷம் கொடைக்கானல். இந்த வருஷம் சிம்லா போகணும்னு சொல்லிண் டிருக்கேன். அவரானால் டார்ஜி லிங் போகலாங்கறார்...''
''நாயை வேற தனியா விட்டுட்டு வந்திருக்கேன். அதுக்கு உடம்பு எப்படி இருக்கோன்னு ஒரே கவலையாயிருக்கு. 'பிளேன்'லேயே போயிடலாம்னு பார்த்தா, டாக்டர் என்னை பிளேன் டிராவல் பண்ணக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கார். எனக்குப் பிளட் பிரஷரோன்னோ!''
நன்றி : விகடன் பொக்கிஷம் (6.3.1960)

கேரக்டர் 'தொழிலாளி' துளசிங்கம்

தலை முழுகினாற்போல் எண்ணெய்ப் பசையற்ற கிராப்பு; சந்தனப்பொட்டு; பனியன்; பனிய னுக்கு மேலே ஓபன் கோட்; அதற்கு மேல் வெள்ளைக்கோடு போட்ட சிவப்புக் காசிப்பட்டு; முரட்டு முக பாவம்; கையிலே ஒரு டிபன்பாக்ஸ்; கக்கத்தில் ஒரு குடை!
துளசிங்கம் வந்து ரயில் ஏற வேண்டியதுதான்... 'ஆடு-புலி' ஆட்டம் ஆரம்பமாகிவிடும்.
''இன்னா தொள்சிங்கம்... ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி 'ஜவ ஜவா'ன்னு இருக்குது?''
''தெரியாதா உனுக்கு... இந்த ஏழுமல இல்ல ஏழுமல... அட, அதாம்பா அந்த ஐனாவரத்து ஆளு... சைக்கிள் சாப்ல இருந்தானே...''
''இப்ப டாணாக்காரனாயிட் டானே, அவன்தானே?''
''அவனேதான்! ராத்திரி செகண்ட் ஸோ பாத்துட்டு சைக்கிள்ள வரேன். மூலகோத்ரம் வழியா புளியாந்தோப் புல உழுந்து, பாராவதி மேலே மெதிக்கிறேன்... இவன் குறுக்கே வந்து மறிச்சிக்கினாம்பா! வா, டேசனுக்குங்கறான்.''
''எதுக்காம்..?''
''சைக்கிள்ளே லைட் இல்லியாம். இவன் எப்டி இருந்த ஆளு... என்னி யப் பார்த்து டேசனுக்கு வான்னு கூப்படறாம்பா! கேட்டுக்கினியா கதைய? போன வெசாயக்கிழமை ரெண்டு ரூபா கைமாத்துக் கேட்டான். இல்லேப்பான்ட்டேன். அந்த ஆத்திரம் போல இருக்குது... கேசு புடிக்கிறாரு. எம் மேலே! 'காத்துல லைட் அணைஞ்சு போச்சு. இன்னம் கூட சூடு ஆறல்லே, பாரு'ன்னு அவன் கையைப் புடிச்சி 'சுடச் சுட' லைட் மேலே வெச்சு அழுத்தினேன். கையைச் சுட்டுக்கினு லபோ திபோன்னு கூவுறான். சரி, நீ தாயத்தை உருட்டு...''
உருட்டிய தாயக்கட்டை ஓடுகிற ரயிலிருந்து கீழே விழுந்து விட்டது. அவ்வளவுதான்! துள சிங்கம் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டான். இது அந்த ரயிலில் அடிக்கடி நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி!
ஆனால், அன்று புதிதாக வந்த கார்டுக்கு இந்த விஷயம் தெரியாது. ரயில் நிறுத்தப்படவே, அவர் பரபரப்புடன் கீழே இறங்கி வந்தார். துளசிங்கம் இருந்த கம்பார்ட்மென்ட்டில் வெளியே தகடு துருத்திக்கொண் டிருப்பதைக் கண்டு, ''யார் இழுத்தது?'' என்று கேட்டார்.
துளசிங்கம் தலையை வெளியே நீட்டி, ''இன்னாய்யா! இப்ப இன்னான்றே? நான்தான் இழுத்தேன்'' என்றான் கார்டைப் பார்த்து.
''காரணமில்லாமல் சங்கிலியை இழுத்தால், அபராதம் அம்பது ரூபாய்னு தெரியாதா உனக்கு?''
''குட்றா இவருக்கு அம்பது ரூபா, வாங்கிக்கினு போவாரு! யோவ்... தாயக்கட்டை உளுந்துடுச்சு. வண்டிய நிறுத்தி எடுத்துக்கினேன். இப்ப இன்னான்றே? பித்தள தாயக் கட்டைய்யா, போயிடுச்சுன்னா நீயா குடுப்பே? கொடியைக் காட்டி நீட்டா போயிக்கினே இருப்பியா... பேச வன்ட்டாரு!''
அன்று பகல் சாப்பாட்டுக்குப் பிறகு, வழக்கமாக நடைபெறும் தொழிலாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
''...சைனாவைப் பாருங்கள்; அங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...'' என்று தோழர் ஒருவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
''யோவ், நிறுத்துய்யா! அவங்க காருலே போனா நமக்கு இன்னா ஆச்சு? நம் ஊர் விசயம் பேசுவியா. அரிசி என்னா வெலை விக்குது... முதல்ல அதுக்கு ஒரு வழி பண்ணு! அத்த வுட்டு சைனாவாம், ரஸ்யா வாம்...'' என்று குறுக்கே எழுந்து குரல் விட்டான் துளசிங்கம்.
கூட்டம் துளசிங்கத்தைக் கை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்ய, பிரசங்கி அசந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.
''அரிசிலே மடக்கினாம் பாரு! அடுத்த வருஷம் நம்ப சங்கத்துக்கு தொள்சிதாம்பா தலைவரு. கன்னி யப்பன் சொகம் இல்லே...''
''தொள்சிங்கம் வாழ்க!'' என்ற கோஷத்துடன் கூட்டம் முடிந்தது.

நன்றி : விகடன் பொக்கிஷம் (26.2.1961)

கேரக்டர் 'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு

''சீ... கய்தே! இன்னாடா முறைக்கிறே! இந்த அம்மாக் கண்ணு கிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம்..! ஆப்பக் கரண்டியாலேயே போடுவேன். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே, அதப் போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? பெரிசா மீசை வச்சிக்-கினு வந்துட்டான்!''
''மோவ்... தாஸ்தி பேசாத! பாக்கி வேணும்னா மரியாதையா கேட்டு வாங்கிக்க. நான் யார் தெரியுமா?''
''நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுனரா நீ! கயித கெட்ட கேட்டுக்கு மருவா தியாம் மருவாதி! துட்டை வெச் சுட்டு ரிஸ்காவை இசுடா! கண் மறைவாவா சுத்திக்கினுக்கீறே, பேமானி!''
கூவம் நதி வாராவதிக்கு அருகில் ஒரு கட்டைத் தொட்டி. அதற்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழ்தான் அம்மாக்கண்ணுவின் ஆப்பக்கடை.
பொழுது விடிந்தால் அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ் காரர்கள், கை வண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் எல்லோரும் நாஷ்டாவுக்கு அம் மாக்கண்ணுவின் கடையைத் தான் நாடி வருவார்கள்.
அவள் சுட்டுப்போடும் ஆப்-பங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் கடன் சொல்லி-விட்டுப் போவார்கள். ஆனால் அம்மாக்-கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. டாணாக்காரர்கள் யாராவது வந்தால், ''இன்னா பல்லைக் காட்டறே? ஓசி நாஷ்-டாவா?'' என்பாள். கார்ப்பரேஷன் ஆள் வந்தால், ''இங்கே ஓசிலே துண்ணுட்டு, அங்கே போயி ஆப்பத்திலே ஈ மொய்க்கு-துன்னு கேசு எழுதிடு. ஏன்யா... ஈ மொய்க்-கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலா-மாய்யா?” என்று கேட்பாள்.
வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாகத் தோன்றினாலும், இளகிய மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர் களுக்குத் தன்னை மீறியும் உபகாரம் செய்யும் குணம் அவளிடம் உண்டு.
''பாக்கி கொடுக்க முடியலேன்னா, அதுக்காக ஏண்டா தலை தப்பிச்சுக்கினு திரியறே? பணம் கெடைக்கிறப்போ கொடு. நான் மாட்டேன்னா சொல்றேன்? இதுக்காவ நாஷ்டா பண்ண வரதையே நிறுத்திடறதா? ஒழுங்கா வந்து சாப்பிட் டுக்கினு போயிக்கினு இரு'' என்று சில ரிடம் அன்பொழுகப் பேசி அனுப்புவாள்.
''நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!''
''ஆசுபத்திரியிலே இன்னா வேலை?''
''முருவன் இல்லே... அதாம்பா, நெதைக் கும் இங்கே வந்து ஆப்பம் துண்ணுவானே, பிச்சைக்கார முருவன்... அவன் மேலே கார் மோதிடுச்சாம், பாவம்! ஆசுபத்திரியிலே படுத்-திருக்கானாம். அவனைப் போய் பாத்-துட்டு, ரெண்டு ஆப்பத்-தையும் குடுத்துட்டு வந்-துடறேன்!''
''சரி; கொஞ்சம் பொயலை இருந்தா குடுத் துட்டுப் போ!'' என்பார் நாடார்.
''உக்கும்! ஈர வெறவெல் லாம் வித்து வர துட்டை முடிபோட்டு வச்சுக்கோ'' என்று சொல்லிக் கொண்டே, இடுப்பில் உள்ள சுருக்குப் பையைத் திறந்து புகையிலையை எடுத்துக் கொடுத்து விட்டுப் போவாள்.
அம்மாக்கண்ணுவுக் குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு. மலையாளத்தார் டீக் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டு கள் கொண்டு வந்து வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அதற்காக மலையாளத் தாருக்கு 'போர்டு பாஸ்' வரும் என்பதும் அவளுக் குத் தெரியும்.
''இன்னா மலையாளம்! வாத்தியார் படம் வந்துக் குதாமே... ஒரு பாஸ் குடேன், பாத்துட்டு வரேன்'' என்று கேட்டு வாங்கிக்-கொண்டு போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து-விடு-வாள்!
நன்றி : விகடன் பொக்கிஷம் (26.2.1961)
கிட்டுவின் காலண்டர்






நன்றி : விகடன் பொக்கிஷம்


கேரக்டர் 'சர்வர்' சந்தானம்


சினிமாக் கொட்டகை யில் 'இன்டர்வெல்' நேரம். திடீரென்று பெஞ்சு வகுப் பிலிருந்து ஒரு சீட்டிச் சப்தம் கேட்டது. ஒரு 'பரட்டைத் தலை' பெஞ்சு மேல் நின்றுகொண்டு 'பால்கனி' பக்கமாகத் திரும்பி, 'டேய்! அதோ பாருடா, சினிமா ஸ்டார் மிஸ். சந்திரா ராணி...' என்று கத்தினான். உடனே பத்துப் பதினைந்து பேர் மளமளவென்று பெஞ்சு மீது ஏறி நின்று சீட்டியடிக் கத் தொடங்கிவிட்டார்கள்.
அத்தனைக் கும்பலில், அந்த அரை வெளிச்சத்தில் சினிமா ஸ்டார் சந்திரா ராணியைக் கண்டுபிடித் தது வேறு யாருமல்ல... சர்வர் சந்தானம்தான்!
'புஸ்' என்று வளர்ந்து புதர் போல் பூத்து நிற்கும் கிராப்பு; சலவையிலிருந்து வந்த மல் ஜிப்பா; அதற் குள்ளே தெரியும் வலை பனியன்; கழுத்தைச் சுற்றிலும் 'டெக்னிக்கலர்' கர்சிப் ஒன்று; கழுத்திலே மெல்லிய சங்கிலி; நெற்றி யில் பெரிய குங்குமப் பொட்டு.
அவன் ஆஸ்தியெல்லாம் ஒரு டிரங்குப் பெட்டிதான். அந்தப் பெட்டிக்குள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, சோப்பு, ஷேவிங் செட், பவுடர் டப்பா, சினிமாப் பாட்டுப் புத்தகங் கள் இவ்வளவும் இடம் பெற்றிருக்கும். டிரங்குப் பெட்டியைத் திறந்தால் பிரபல சினிமா நட்சத் திரங்களின் வர்ணப் படங் கள் ஒட்டப்பட்டிருக்கும்.
யாராவது உப நடிகர் களோ, ஸ்டுடியோக்களில் வேலை செய்பவர்களோ, அவன் ஓட்டலுக்கு வந்து விட்டால் போதும்... அவர் களை லேசில் விடமாட் டான்!
''வாங்க அண்ணா! நீங்க 'பாட்டியே தாத்தா வின் பத்தினி' என்கிற படத்திலே காமெடியனா நடிச்சிருக்கீங்களே... நான் நேத்துதான் பார்த்தேன்! சொல்றேனேன்னு கோவிச் சுக்காதீங்க, படம் சுமார் தான்! போட்டோகிராபி மட்டம். ரிக்கார்டிங்கும் மோசம்! படம் ஓடறது உங்களாலேதான். எனக்குக் கூட சினிமாவிலே ஆக்ட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. நீங்க மனசு வைத்தால்...'' என்று ஓர் அசட்டுச் சிரிப்பு உதிரும் அவன் இதழ்களிலிருந்து.
செவ்வாய்க்கிழமை யன்று 'மனோகரா கபே'க்கு வார விடுமுறை. ஆனால், அன்றுதான் சந்தானத்துக்கு வேலை அதிகம்! காலை ஏழு மணிக்கே புறப்பட்டு விடுவான். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டுக்கருகே போய் நின்றுகொண்டு ஸ்டுடியோக்களுக்குச் செல்லும் கார்களையும், நட்சத்திரங்களையும் சென்ஸஸ் எடுத்துக்கொண்டு இருப்பான். அது முடிந்ததும் டி.நகர், காந்தி நகர், கோபாலபுரம் என்று நட்சத் திரங்கள் வாழும் க்ஷேத்திரங்களுக் கெல்லாம் ஒரு முறை போய் தரிசித்துவிட்டு வருவான்.
சினிமாப் பத்திரிகைகளில் கேள்வி பதில் பகுதியை துருவித் துருவிப் படிப்பான். தான் எழுதிப் போட்ட கேள்விக்குப் பதில் வந் திருக்கிறதா என்று ஒவ்வொரு பத்திரிகையாக வாங்கிப் பார்த்து ஏமாந்து போவான்.
எப்படியாவது சினிமாவில் தலை காட்டிவிடவேண்டும் என்று துடியாய்த் துடித்தான். சுருட்டை மயிர் இருந்தால் சினிமாவில் சேருவது சுலபம் என்று நினைத் திருந்த அவனுக்கு ஒரு சான்ஸ் கூடக் கிடைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு கிராப்பை வேறு விதமாக வாரிப் பார்த்தான். நாசூக்காக மீசை வைத்துப் பார்த்தான். குங்குமப் பொட்டைச் சிறிதாக்கினான். எதற்கும் பலன் இல்லை.
அப்புறம் ஒருநாள், அவனுக்கு ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. ஸ்டுடியோ காண்டீ னில் சர்வர் வேலைதான். ஆனால், அதற்காக அவன் வருத்தப்பட வில்லை.
தினமும் ஸ்டுடியோவுக்கு வரும் ஸ்டார்களை நேரில் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?





நன்றி : விகடன் பொக்கிஷம் (13.3.1960)